வேலூர்: கடந்த 6 நாட்களில் மட்டும், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நடைபெறவிருந்த 16 குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

அதேசமயம், வெளியில் தெரியாமல் பல குழந்தை திருமணங்கள் நடைபெற்றிருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது; குழந்தை திருமணங்களை தடுக்க சென்றபோது கிராமத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர்களின் மிரட்டல்களை சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனால் இறுதியில் பாதிக்கப்படவிருந்த சிறுமிகளை மீட்டுவிட்டோம் என்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சே.ஆண்டாபாட்டு கிராமத்தில் மட்டும் 3 குழந்‍தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட கிராமத்தில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அம்மாவட்டத்தில் கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் பகுதிகளிலிருந்து பாதிக்கப்படவிருந்த மொத்தம் 9 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு பெண் கல்லூரி மாணவி மற்றும் இதர சிறுமிகள் பள்ளிகளிலிருந்து இடைநின்றவர்கள்.

17 வயது பெண்ணை மீட்டபோது, குடும்பத்தினர் சூழ்ந்து கொண்டதால், கிராம நல்வாழ்வு அதிகாரி காவல்துறையில் புகார் அளித்தார். எனவே, இந்த விஷயத்தில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்று கண்காணிக்கப் போவதாக தொடர்புடைய அதிகாரிகள் கூறினர்.