போஸ்டர் அடிப்பதில் அ.தி.மு.க.வினருக்கு இணை யாருமில்லை. ஜெயலலிதா உடல் நலமின்றி இருந்தபோது, “கல் நெஞ்ச காய்ச்சலே.. எங்கள் அம்மாவை சீண்டாதே” என்று ஜூரத்துக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியவர்கள்தான் அ.தி.மு.க.வினர்.

இப்போது டிடிவி தினகரனை பாராட்டி இன்று முளைத்துள்ள ஒரு போஸ்டர் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுக்கு டி.டி.வி. தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் ஜாமீனில் விடப்பட்டார்.

சின்னத்தைப் பெற, லஞ்சம் கொடுத்த விவகாரம், அ.தி.மு.க. கட்சி மீதே பெரும் கறையாக படிந்தது. பலரும் தினகரனின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்தனர். சமூகவலைதளங்களில் தினகரனை பலரும் கேலி கிண்டல் செய்தனர்.

ஆனால் தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள தினகரனை வாழ்த்தி சென்னை முழுதும் இன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

“இரட்டை இலை சின்னத்தைக் காக்க பல சோதனைகளைத் தாங்கிய எங்கள் தலைவா” என்று குறிப்பிட்டு அதிமுகவைச் சேர்ந்த இருவர் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.

போஸ்டரின் மேல் பகுதியில், “அநீதி தோற்றது! தர்மம் வென்றது” என்ற சப் டைட்டிலும் காணப்படுகிறது.

இந்த போஸ்டரை பார்ப்பவர்கள், “சின்னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்றதே இழிவான விசயம். இதில் சிறை சென்று வந்தவருக்கு.. அதுவும் ஜாமீனில் வந்தவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களுமா” என்று அதிர்ச்சி தெரிவிக்கிறார்கள்.