டில்லி

ஏர் இந்தியா விமானங்களுக்கு எரி பொருள் வழங்குவதை நிறுத்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன.

இந்திய அரசு விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடும் கடன் சுமையில் சிக்கியுள்ளது.    இந்நிறுவனத்துக்கு இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் எரிபொருள் வழங்கி வருகின்றன.

ஏர் இந்தியா நிறுவனம் இந்த 3 நிறுவனங்களுக்கும் 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டியுள்ளது.

இவற்றில்  இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டும் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.  ஏர் இந்தியாவால் இந்த நிலுவையை மொத்தமாகத் திருப்பி செலுத்த முடியாது என்பதால், மாதம் 100 கோடி ரூபாய் வீதம் 3 நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்தது.

இதை முறையாகப் பின்பற்றாததால் வெள்ளிக்கிழமை அதாவது இன்று முதல், முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்படும்  என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து இருந்தன.

ஏர் இந்தியா நிர்வாகம் விரைவில் நிலுவையில் உள்ள தொகைகளை வழங்குவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது.  இதையடுத்து எண்ணெய் விநியோகத்தை நிறுத்தும் முடிவை  எண்ணெய் நிறுவனங்கள் தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளன.