டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் வரும் 1ம் தேதி முதல் ஓடிபி எண் கூறினால் தான் கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என்று புதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துகிறது.

சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசானது பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் செல்போனுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணை கூறினால் தான் சிலிண்டர் விநியோகிக்கப்படும். இந்த நடைமுறை வரும் 1ம் தேதி அமலுக்கு வருகிறது.
இந்த நடைமுறையில் உள்ள மாற்றங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நவம்பர் 1 முதல் இந்த ஓடிபி முறை அமலாகும் போது, அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் டிஏசி எனப்படும் டெலிவரி அங்கீகாரக்குறியீடு (Delivery Authentication Code) என்ற முறையை நடைமுறைப்படுத்தும்.
இந்த முறையின் படி, வாடிக்கையாளர் கேஸ் சிலிண்டர் பதிவு செய்தவுடன், அவரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை சிலிண்டர் வினியோகம் செய்பவரிடம் தெரிவித்த பின்னரே, கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும்.
அவ்வாறு செல்போன் எண் பதிவு செய்யப்படாவிட்டால், எண்ணெய் நிறுவனங்கள் அதற்கும் ஒரு மாற்று ஏற்பாட்டை வைத்துள்ளன. சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர் உடனடியாக புதிய எண்ணை பதிவு செய்து கொடுப்பார். அதன் மூலம் ஓடிபி எண்ணை பெற முடியும்.
எனவே, இது போன்ற சிக்கல்களை தவிர்க்க அனைத்து வாடிக்கையாளர்களும் முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை சரி பார்த்துக் கொள்ளுமாறு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. முறைகேட்டை தடுக்கவும், சரியான வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகிறதா என்பது உறுதி செய்யவும் மத்திய அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துகிறது.