சிறப்பு கட்டுரை:

யற்கை செயல்பாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பல ஆண்டுகளாகவே மோதல் இருந்து வருகிறது. மழை ஆகட்டும், புயல்காற்று ஆகட்டும், கடல் கொந்தளிப்பு மற்றும் சுனாமி ஆகட்டும் எல்லாமே மனிதர்களோடு மோதும் ஒன்றாகவே இருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகளில் உருவான சரியான திட்டமிடல் இல்லாத வரைமுறையற்ற வளர்ச்சி நடவடிக்கைகள் காரணமாக  இயற்கை வளங்கள் பெரும்பாலும் கொள்ளை போய் விட்டன. இயற்கை பசுமையும் அழிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இயற்கை அழிப்பை குறியீடாக வைத்து ஆண்டு தோறும் அடைமழையும், புயல்காற்றும் தமிழ்நாட்டு மக்களை புரட்டி போடுகிறது. அவர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைக்கிறது. சென்னையிலிருந்து தொடங்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இது தொடர்கதை. தமிழ்நாட்டின் இயற்கை சுரண்டலின் விளைவு இது.

குமரி மாவட்டம் என்பது தமிழ்நாட்டின் கடைக்கோடி. கேரளா போன்றே பசுமையான இயற்கை அமைப்பையும், நீண்ட நெடிய கடற்கரையையும் கொண்டது. மேலும் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் ஆறு கடலோடு கலக்கும் பொழிமுகங்களையும் கொண்டது. தமிழகத்தின் பிறமாவட்டங்களோடு ஒப்பிடும் போது இதன் காலநிலை மிகவும் மாறுபட்டது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையடிவார காடுகள், பசுமையான வயல்வெளிகள், பணப்பயிரான ரப்பர் போன்றவை இதன் முக்கிய இயற்கை ஆதாரங்கள். இந்நிலையில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் இம்மாவட்ட மக்கள் துயர நிலைக்கு உட்படுவது இயல்பே. காரணம் தொழிற்சாலைகள் இல்லாத நிலையில் விவசாய நிலங்கள் மட்டுமே பெருவாரியான மக்களுக்கு வாழ்வாதாரம். மேலும் நடுத்தரவர்க்கம், உயர்நடுத்தரவர்க்கம் அனைத்தும் ஏதோ ஒருவிதத்தில் விவசாயத்தோடு  தொடர்பு கொண்டது. இதன் தொடர்ச்சியில் மாவட்டத்தையே புரட்டி எடுத்த புயல் காற்று இந்த மக்களுக்கு முதல் அனுபவமே.

கடந்த நவம்பர் 30 அதிகாலை நேரம். குமரி மாவட்ட மக்கள் எல்லாம் அயர்ந்து தூங்கிக்கொண்டி ருந்தார்கள். அப்போது தான் கடலில் உருவாகிய காற்று மெதுவாக சமவெளிக்கு வந்து மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியாக விவசாய நிலங்களை, மரங்களை, மின்கம்பங்களை, வீடுகளை பதம் பார்த்தது. மதியம் 12 மணி வரை வீசிய காற்று மொத்த மாவட்டத்தையும் சுழற்றிக்கொண்டு, புரட்டி போட்டது.

அதற்கு முந்தைய நாள் புயல் வரும் என்றும், மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் பலத்த காற்று வீசும் என்பதை சரியாக கணிக்கவில்லை. வெதர்மேன் என்ற தனியார் வானிலை ஆய்வாளர் தான் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என்று சரியாக கணித்திருந்தார். அதே நேரத்தில் காற்று வீசும் என்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் மிக தாமதமாக தான் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திருந்தது. அதன் காரணமாக சரியான தகவல் தொடர்பு எல்லோருக்கும் கிடைக்கவில்லை.

குறிப்பாக மீனவர்களுக்கு இது பற்றிய கண்டிப்பான அறிவுரைகளும், உத்தரவுகளும் இல்லாததன் காரணமாக பலர் வழக்கம் போல் கடலுக்கு சென்றனர். மீனவர்களை பொறுத்தவரை புயல் என்பதை சாதாரண மழையாக தான் கருதினர். காரணம் இதற்கு முந்தைய சூழலும் அப்படி தான் இருந்தது. இதன் காரணமாக நவம்பர் 28 மற்றும் 29 தேதிகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு அடுத்த நாள் மிக அதிர்ச்சியாக இருந்தது.

நள்ளிரவு 1 மணி முதல் வீசிய புயற்காற்று கடலை பதம்பார்த்தது. மீனவர்களை பொறுத்தவரை பெரும்பாலும் கேரள எல்லையோர கடற்கரை கிராமங்களான இரயும்மன் துறை, பூத்துறை, சின்னத்துறை, தூத்தூர், வள்ளவிளை, நீரோடி போன்ற பகுதிகளிலிருந்து கடலுக்கு சென்றிருந்தனர். இவர்களின் எண்ணிக்கை சுமார் 2000 இருக்கலாம்.

பொதுவாக கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களை பொறுத்தவரை எல்லாவிதமான காற்று மற்றும் மழை ஆகிய இடர்பாடுகளை தாங்கும் சக்தி படைத்தவர்கள். அதிலிருந்து எப்படி விடுபட வேண்டும் என்ற நுண்ணுணர்வையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். இதனால் தொடக்கத்தில் வீசிய காற்றை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்.

நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்தது. இதனால்  நிலைமை விபரீதம் அடைவதை உணர்ந்தனர். அவர்கள் சென்ற படகை காற்று தன் அதீத பலத்தால் இழுக்கத்தொடங்கியது. இதனால் மீனவர்கள் பலர் செய்வது அறியாமல் திகைத்தனர். பலர் நீந்த தொடங்கினர். ஆனாலும் அவர்களின் நீந்தலை காற்று எதிர்திசைக்கு நகர்த்தி திசையறியாத இடத்திற்கு கொண்டு சென்றது. மேலும் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பல படகுகள் கவிழ்ந்தன.

பலர் தண்ணீரில் மூழ்கினர். மேலும் காற்றின் வேகத்தை கிழித்துக்கொண்டு நீந்தியவர்கள் கரை சேர்ந்தனர். பலர் அருகில் வந்த படகுகள் மற்றும் கப்பல்களில் உதவி கோரி தங்களை தற்காத்துக்கொண்டனர்.  ஓகி அனுபவம் எப்படி   இருந்தது என்பதை பற்றி எனக்கு தெரிந்த மீனவர் ஒருவர் அதை பகிர்ந்து கொண்டார். “ பொதுவாகவே நாங்கள் கடலுக்கு செல்லும் போது வானிலை நிலவரங்களை அறிந்து தான் செல்வோம்.

உள்ளே செல்லும் போது வானம் எப்படி இருக்கும்? கடல் கொந்தளிப்பு எப்படி இருக்கும்? அதிலிருந்து மீள்வது எப்படி போன்ற எல்லா தகவல்களையும் நன்கு தெரிந்து வைத்துக்கொண்டு அதன் படி  ஏற்படும் இடர்களை எதிர்கொள்ளும் திறனோடு தான் செல்வோம். ஆனால் அன்றைக்கு ஓகி புயல் காற்று குறித்த சரியான தகவல் வானிலை ஆய்வு மையத்திலிருந்து எங்களுக்கு வரவில்லை என்பதே உண்மை.

எங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் இரு நாட்களுக்கு முன்பே தெளிவாக தகவல் வந்திருந்தால் யாருமே மீன்பிடிக்க சென்றிருக்க மாட்டோம். அவ்வாறான தகவல் எங்களுக்கு கிடைக்காததன் காரணமாக நாங்கள் கடலுக்கு சென்று மாட்டிக்கொண்டோம். சம்பவத்தன்று நள்ளிரவில் காற்று வீசத்தொடங்கிய நிலையில் நாங்கள் சென்ற படகு கொஞ்சம் கொஞ்சமாக ஆடத்தொடங்கியது. பின்னர் ஒரு கட்டத்தில் அதை நிறுத்த முயன்றும் பலனில்லாமல் போனது. இதனால் நாங்கள் அனைவரும் உயிர்பிழைக்க படகில் இருந்து கடலில் குதித்து நீச்சலடிக்கத் தொடங்கினோம். என்னோடு இணைந்து நீச்சலடித்தவர்களில் சிலரின் கதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. நான் நீச்சலடித்த போதும் கூட கடற்காற்று பல திசைகளிலும் என்னை இழுத்துச் சென்றது. இருந்தாலும் ஒருவழியாக நீந்தி கரைசேர்ந்தேன்.

இது மாதிரியான ஒரு புயல்காற்றை நான் என் வாழ்நாளில் இதுவரை பார்த்ததில்லை என்றார். அதை சொன்ன போது அவரின் உடம்பு சிலிர்த்தது. முகம் முழுக்கவே பதட்டமும், சோகமும் அப்பியிருந்தது. இப்படி அவரின் நண்பர்கள் பலர் பாதிக்கப்பட்டனர். மேலும் இவரை போன்ற மற்றொருவர் கூறும் போது “ நாங்கள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்த போது இதனோடு நம் வாழ்வு முடிந்து விட்டது என்று நினைத்தோம்.

பின்னர் கடலில் நீந்தி அவ்வழியே வந்த கப்பலில் ஏறி உயிர்தப்பினோம். எங்களை போன்றவர்களின் கதி என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றார். இந்நிலையில் அன்றைய நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களில் பாதி பேர் பல்வேறு இடங்களில் கரை ஏறி இருக்கிறார்கள். மீதி உள்ளவர்களின் உடல்கள் தான் கரை ஒதுங்கி இருக்க வேண்டும். பலர் கடல் நீரில் நீந்தும் போது காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மூழ்கி இருக்கிறார்கள்.

இதன் மூலம் அவர்களின் உயிர்பிரிந்து உடலை மீன்கள் தின்று பின்னர் அலையின் தாக்கம் காரணமாக அவர்களின் உடல் கரை ஒதுங்கி இருக்கலாம். இன்னும் பலரின் உடல்கள் அழுகி ஆழ்கடலில் மூழ்கி இருக்கலாம். இதனால் பலரின் உடல்களை அடையாளம் காண முடியவில்லை. மேலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும்  இறந்து போன மீனவர்களின் விபரங்களை மறைப்பதால் உண்மையான எண்ணிக்கை குறித்த மர்மம் இன்னமும் நிலவுகிறது. மீனவர்களின் குடும்ப கணக்கு படி சுமார் 1000 மீனவர்கள் வரை பலியாகி இருக்கக் கூடும்.  மேலும் மீனவர்களுக்கான இறப்பு சான்றிதழை அரசு ஒருவருடம் கழித்து உறுதிப்படுத்திய பின்னரே வழங்கும்.

இதுவும் கூட இறந்தவர்கள் பற்றிய தகவல் சார்ந்த மர்மங்களுக்கு துணை போகும் ஒன்று. மேலும் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களில் இன்னமும் சோகம் நிலவுகிறது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல குடும்பங்கள் ஆண்கள் அற்ற குடும்பமாக மாறி இருக்கின்றன. இதனால் இவ்வருட கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் கூட பல மீனவர் கிராமங்களில் இல்லை.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் இருந்தே காங்கிரஸ் அதிக அளவில் வெற்றி பெறும் மாவட்டம். இதனால் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக போன்றவை இதனை புறக்கணித்தே வந்திருக்கின்றன. அடிப்படை வசதிகள், வளர்ச்சி திட்டங்கள் சார்ந்து எதுவும் திருநெல்வேலியோடு நின்று விடும். இந்த பக்கம் எட்டிப்பார்க்க மாட்டார்கள். இதனால்  குமரிமாவட்டத்தில் உள்ள பலரும் சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு புலம்பெயர்கிறார்கள்.

மேலும் வளைகுடா நாடுகளில் கணிசமானோர் வேலைக்காக சென்றிருக்கின்றனர். தமிழக அரசால் இந்த மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையில் இங்குள்ள வெகுமக்களின் நீண்டநாள் குமுறல் தான் தங்களை மீண்டும் கேரளாவுடன் இணைத்து விடுங்கள் என்ற கோஷம். காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தார் ஆயிரக்கணக்கில் திரண்டு இரயில் தண்டவாளத்தில் மறியல் போராட்டம் செய்தார்கள். அப்போது தான் இந்த கோஷம் எழும்பியது. அது பாதிக்கப்பட்ட மனநிலை சார்ந்த தற்காலிக குமுறல் என்றாலும் இதன் பின்னுள்ள நியாயமற்ற தன்மை விமர்சனத்திற்குரியது.

தமிழ்நாட்டோடு தங்களை இணைக்க வேண்டும் என்று நேசமணி தலைமையில் பலர் நடத்திய தியாக போராட்டங்களின் பலனால் 1956 ல் இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட்டன. அதுவரை கேரளாவுடன் இணைந்திருந்த குமரிமாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைந்தது. தொடக்க காலங்களில் குமரிமாவட்ட மக்களுக்கு மொழி அடையாளம் சார்ந்து தமிழ்நாட்டின் பிறமாவட்ட மக்களால் மலையாளி  என்ற ஒதுக்கல் இருந்தது. அதே நேரத்தில் கேரளாவில் பாண்டிகள் என்ற ஒதுக்கல் இருந்தது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்நாட்டை பொறுத்தவரை குமரிமாவட்ட அடையாளம் சார்ந்த சிக்கல் எல்லாம் பெரும்பாலும் மாறி இருக்கிறது எனலாம். பெரும்பாலான தமிழ் மக்கள் குமரி மண் சார்ந்தவர்களை தமிழர்கள் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இங்குள்ள எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் படைப்புகள் எல்லாம் தமிழகம் முழுவதும் பேசப்படு கின்றன. ஓரளவு மலையாள சாயல் கொண்ட குமரி மாவட்ட மொழி கூட தற்போது மாறி வருகிறது. இதன் தொடர்ச்சியில் 99 சதவீத மலையாளிகளும் குமரிமாவட்ட மக்களை பாண்டிகள் என்றே அழைக்கி றார்கள். அவர்கள் இன்னமும் இங்குள்ளவர்களை ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களிடம் இயல்பாக காணப்படும் மேட்டுக்குடி தன்மை இதனை மேலும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளையும்  திருவனந்தபுரத்தில் தான் பிறந்தார். பல தமிழறிஞர்கள் கூட இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள் தான். மேலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குமரிமாவட்டம் இருந்த போது உயர்சாதியினரின் ஆதிக்கம் காரணமாக இங்குள்ள நாடார் சமுதாய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டோடு இணைந்தது முதல் தான் அவர்களின் வாழ்வியலில் முன்னேற்றம் ஏற்பட்டது.  ஆகவே அரசுகளால் புறக்கணிக்கப்படுகிறது என்ற வாதம் தேவையற்ற ஒன்று. பெரும் அபத்தம். மாவட்ட இணைப்பிற்காக போராடிய மொழிப்போர் தியாகிகளை நாம் கொச்சைப்படுத்தும் நடவடிக்கை இது. மேலும் குமரிமாவட்ட மக்கள் தங்களின் உரிமைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்துவது, அதன் மூலம் அரசை நிர்பந்திக்க செய்வது . இது தான் உடனடி தேவை. அவசியமானதும் கூட.

கட்டுரையாளர்:  எச்.பீர்முஹம்மது

mohammed.peer1@gmail.com