ஓகி புயல் நிவாரணம்: கேரளா அரசின் அக்கறையும்,  தமிழகத்தின் புறக்கணிப்பும்

சிறப்புக்கட்டுரை: கன்னியாகுமரியிலிருந்து  நந்தகுமார்

காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்ற கோரிக்கையுடன் குமரியின் மீனவர்களின் கோரிக்கை போராட்டம் இப்போது ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. கூடவே, எங்களை கேரளாவுடன் இணைத்து விடுங்கள் என்ற மீனவர்களின் கோரிக்கையும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டத்தின் அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களிடமிருந்து இப்படிப்பட்ட கோரிக்கைகள் வருவதில் வியப்பேதும் இல்லை. எனக்கு தெரிந்து அவர்கள் எக்காலத்தும் தமிழக அரசால் கண்டுகொள்ளப்பட்டதே இல்லை.

இன்றைய குழித்துறை ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மீனவர்க ளும் சின்னத்துறை முதல் நீரோடி காலனி வரையிலான 8 கடலோர கிராம மக்கள் தான். சமீப கால கடலோர திட்டங்களால் கடலரிப்புகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இவை. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்  எனது தந்தையின் நண்பரைக் காண தூத்தூருக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டி ருந்தேன். கடலோரத்தில் அமைந்திருந்த அவரது வீட்டிலிருந்து சுமார் 800 மீட்டர்களுக்கு அப்பால் தான் கடல் இருந்தது. ஆனால், இன்று அவரது வீடு இருக்கும் பகுதி கடலாக மாறிவிட்டது.

நாளுக்கு நாள் கடலரிப்பை எதிர்கொண்டு, தங்கள் வாழ்விடங்களை கடலில் மெல்ல இழந்து வரும் இந்த மீனவர்கள் கடலை தங்கள் தாயாகவே பார்த்து வருகின்றனர். பெரிய படகுகள் அவர்களிடம் இல்லை. சிறு வள்ளங்களில் சராசரியாக 5 பேர் வீதம் கடலுக்குள் சென்று இரண்டு அல்லது மூன்று தினங்களில் கரைக்கு திரும்புவது தான் அவர்கள் வழக்கம்.

நவம்பர் 30 க்கு முன்னரும் அவ்வாறே  இக்கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்ற வர்கள். புயல் வீசி முடிந்த அன்று மாலை நீரோடி காலனியில் மட்டும் 83 வள்ளங்களில் சென்ற வர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என உள்ளூர் நண்பர் ஒருவர் கூறிய போது அதிர்ந்து தான் போனேன்.

பொதுவாகவே, சென்னை, கடலூர் உட்பட உள்ள பகுதிகளில் புயல் வீசும் போது முன்னறிவிப்புகள் அதற்கும் சில நாட்களுக்கு முன்னரே வந்துவிடுவது வழக்கம். ஆனால், ஓகி புயல் குறித்த எந்த முன்னறிவிப்புகளும் இல்லை.  நவம்பர் 29 அன்று நள்ளிரவில் தான் தங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு புயல் வருவதாக, வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து அறிவிப்பே வந்ததாக கேரள அரசு கூறியது.

ஆனால், குமரி மக்களின் நிலையோ, பரிதாபம் தான். கொடுங்காற்று பேயாட்டம் ஆடிய படி மரங்களை கீழே தள்ளிப் போடும் போது வீடுகளில் பதுங்கி இருந்தபடியே கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. அது ஓகி புயல் என்பது, மறு நாள் காலையில் பத்திரிக்கை களைப் பார்த்து தெரிந்து கொண்டவர்கள் தான் ஏராளம்.

இப்படியிருக்க, எந்தவித தொலைதொடர்பு வசதிகளும் இன்றி கடலுக்கு வள்ளங்களில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் நிலை இன்னும் பரிதாபகரமானது. முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் இரு தினங்களுக்கு முன் வந்திருந்தால் கூட பல நூறு மீனவர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

இன்று குமரி மாவட்டம் முழுவதும் 1013 மீனவர்களின் நிலை என்னவென தெரியவில்லை எனக் கூறுகின்றனர்  மீனவர் சங்க பிரதிநிதிகள். அரசோ இதுவரை குமரி மாவட்டத்தில் பலியான மீனவர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டே பேர் தான் எனக் கூறியுள்ளது.

புயல் வீசி, 8 நாட்கள் கடந்த பின்னும் கடலுக்குச் சென்றவர்களைப் பற்றிய எந்தவித விவரங்களும் இன்னும் கிடைக்கவில்லை. தேடுதல்களும் மந்தகதியிலேயே நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் கேரள அரசின் நடவடிக்கைகள் கவனத்தில் கொள்ளத் தக்கது.

எட்டி கால் வைத்தாலே கேரளா மாநிலம் என்ற நிலையில் வசிப்பவர்கள் இந்த மீனவ கிராம மக்கள். அவர்களது தொழிலுக்காகவும், பிற தேவைகளுக்காகவும், கேரளப் பகுதிகளைச் சார்ந்து இருப்பவர்கள். துவக்கத்தில் பிரச்சினையின் தீவிரத்தை குறைத்து மதிப்பிட்ட கேரள அரசு, பின்னர் களத்தில் தீவிரமாக செயல்பட்டது. மத்திய அரசின் உதவியை கேட்டுப் பெற்றதுடன், கடற்படை கப்பல்களில்  வீரர்களுடன் உள்ளூர் மீனவர்களையும் சேர்த்தே அனுப்பி வைத்தது. தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் நேரடியாகவே தேடுதலில் ஈடுபட்டார். அதன் பயனாக சில குமரி மீனவர்களும் மீட்கப்பட்டனர்.

ஆனால், ஒப்பீட்டளவில், தமிழக அரசின் நடவடிக்கைகள் மெத்தனமாக இருந்தது என்றே கூற வேண்டும். கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயனும், அவரது அமைச்சரவை சகாக்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்து, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி 500க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்ட நிலையில், தமிழகப் பகுதி மீனவர்கள் கேரளப் பகுதியின் தகவல்களையே எதிர்நோக்கி இருந்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குமரியில் இருந்தாலும், நடவடிக்கைகளில் வேகம் இல்லாத நிலையே இருந்தது.

ஒருபுறம், மீட்புப் பணிகளில் மந்த நிலை. மறுபுறம் போதிய இழப்பீடு இன்மை என ஒட்டுமொத்தத் தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவே மீனவர்கள் உணரலாயினர். தமிழக அரசு ஒட்டுமொத்த மாக அறிவித்த இழப்பீட்டுத் தொகை ரூ.25 கோடி மட்டுமே. அதுவும் இறந்து போன மீனவர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்தது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பில் எந்தவித புனரமைப்பும் இல்லாமலேயே இருந்தது. ஆனால், மீட்புப் பணியில் காட்டிய அதே வேகத்தை புனரமைப்பில் கேரள அரசு காட்டியது.

43 முகாம்களில் 8000 க்கும் அதிகமான மீனவர்களை தங்க வைத்து பராமரித்ததுடன் அவர்களுக்கு இழப்பீடுகள் கணிசமாக வழங்கப்பட்டன. காயமடைந்தவருக்கு ரூ.5 லட்சமும், இறந்து போன வர்கள் மற்றும் காணாமல் போனவர்களுக்கு தலா ரூ.20 லட்சமும் என இழப்பீட்டுத் தொகையை தாராளமாக அறிவித்ததுடன், 1.45 லட்சம் மீனவர்களுக்கு 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தலா ரூ.45 வீதமும், அதற்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.60 வீதமும் 7 நாட்களுக்கு வழங்க உத்தரவிட்டு வழங்கி வருகிறது.

அத்துடன், கேரள கடலோர பாதுகாப்புப் படையில் காணாமல் போகும் மீனவர்களை எதிர்காலத்தில் மீட்க வசதியாக 200 மீனவர்களை கல்வி அடிப்படையில் அல்லாமல், அனுபவ அடிப்படையில் சேர்க்கவும் கூடவே ஓகி புயலில் இறந்து போன மீனவர்களின் வாரிசுகளுக்கு அவற்றில் முன்னுரிமை வழங்கவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதில் கவனிக்கத்தக்க அம்சம் எனில், வருங்காலங்களில் காலநிலை பற்றி மீனவர்கள் தெரிந்து கொள்ளவும், தகவல் தொடர்புகளை இலகுவாக்கவும் வசதியாக தேவையான தொழில் நுட்ப அம்சங்களை மீனவர்களுக்கு வழங்க அவ்வரசு முடிவு செய்துள்ளது.

இதோடு சேதமடைந்த படகுகள், வலைகளை மறு சீரமைத்துக் கொள்ள நிதியுதவி என நிவாரணங் களை கேரள அரசு படுவேகமாக செய்யும் போது, தமிழக அரசு தரப்போ, மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் மந்தத் தன்மையுடனும், போதிய நிவாரணங்கள் அளிக்காமல் புறக்கணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு கேரளப் பகுதியில் இருக்கும் தனது பக்கத்து வீட்டு மீனவருக்கு கிடைக்கும் மறு வாழ்வும், தமிழகப் பகுதியில் தனது வாழ்வாதாரங்களை இழந்து நிற்கும் நிலையும் ஒரு சேர மீனவர்களின் கோபக்கனலாக மாறியதன் விளைவே ‘தமிழ் நாடு வேண்டாம் எங்களை கேரளா வுடன் இணையுங்கள்’ என்ற முழக்கம்.

தமிழக அரசு தொடர்ந்து இவ்வாறு புறக்கணிப்பில் ஈடுபடுமெனில், இம்முழக்கங்கள் குமரியின் பிற பகுதிகளில் எதிரொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

You may have missed