சென்னை:

கி  புயலின் போது மாயமான மீனவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இன்று 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியை வழங்கினார்.

கடந்த வருடம் நவம்பர் 30ந்தேதி வங்க கடலில் உருவான  ஓகி புயல் வங்க கடலோர பகுதிகளான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப்போட்டது. மாவட்டத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்திய இந்த புயல் குறித்து மத்திய, மாநில அரசுகள் சரியான தகவல்கள் கொடுக்காததால் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் பாதிப்புக்குளாகினர்.

இவர்களில் 500க்கும் மேற்பட்டோர் இன்னும் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு அறிக்கைபடி 177 மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள்  குறித்த தகவல்கள் 2 மாதங்களுக்கு மேலாகியும் தெரியாத நிலையில், அவர்கள் உயிரிழந்து விட்டதாக கருதி, பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்பட்டது.

இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 25 மீனவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவியை வழங்கினார்.

அப்போது, முதல்கட்டமாக ஒவ்வொரு மீனவரின் குடும்பத்துக்கும் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

மீதம் 10 லட்சம் ரூபாய் 6 மாத கால அவகாசத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் வைப்பு நிதியாக வங்கி கணக்கில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் உள்பட தமிழக அமைச்சர்கள்,  தலைமைச் செயலாளர் உள்பட பலர்  பங்கேற்றனர்.

ஏற்கனவே  ஓகி  புயலின்போது உயிரிழந்த 27 தமிழக மீனவர்களின் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபாய் வீதம்  5 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.