பெங்களூரு

வாடகை வாகன நிறுவனமான ஓலா விரைவில்10000 மின் ஆட்டோக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக அதன் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் தற்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு வரவேற்பு பெருகி வருகிறது.   இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்படும் என கூறப்படுகிறது.   இவ்வகையில் வாடகை வாகன நிறுவனமான ஓலா நிறுவனம் மின் வாகனங்கள் உபயோகிப்பதை ஊக்குவித்து வருகிறது.   கடந்த வருடம் மே மாதம் 26 ஆம் தேதி இந்த நிறுவனம் தனது மின் வாகன திட்டத்தை தொடங்கியது.

இந்த திட்டத்தின் கீழ் மின்சர கார்கள், மின்சார ஆட்டோக்கள், மின்சார பேருந்துகள்,  கூரை மீது சூரியத் தகடுகள் பொருத்துதல்,  கார்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்தல், பேட்டரி உற்பத்தி போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.   இந்த திட்டம் நாக்பூரில் ஆரம்பிக்கப்பட்டது.    தற்போது இது குறித்து ஓலா நிறுவனத் தலைவர் பவிஷ் அகர்வால் பெங்களூருவில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.

அப்போது அவர், ”சென்ற வருடம் நாக்பூரில் நாங்கள் மின்வாகன திட்டத்தை தொடங்கினோம்.   அது தொடங்கப்பட்டு ஒரு வருடங்களுக்குள்ளாகவே  நாங்கள் பல மின் வாகனங்களை புழக்கத்தில் விட்டுள்ளோம்.   எங்களது மின் வாகனங்கள் இது வரை 40 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளன.

அடுத்த படியாக நாங்கள் மின்சார ஆட்டோக்களை புழக்கத்தில் விட எண்ணியுள்ளோம்.    முதல் கட்டமாக இன்னும் ஒரு வருடத்தில் 10000 ஆட்டோக்கள் நாடெங்கும் புழக்கத்துக்கு வர உள்ளது.  வரும் 2021 முடிவதற்குள் சுமார் 10 லட்சம் மின் வாகனங்களை புழக்கத்தில் விட திட்டமிட்டுள்ளோம்” என கூறினார்.