சென்னை: கொரோனா வைரஸ் பரவலால், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட அனைத்துவகை நலத்திட்ட உதவித்தொகைகளும் வீடுதேடி வரும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: தமிழகத்தில் மாதந்தோறும் மொத்தம் 32,45,000 பயனாளிகளுக்கு வங்கி கணக்கு மூலமாகவும், போஸ்டல் மணியார்டர் மூலமாகவும் தலா ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், முதியோர்களை கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, முதியோர் உதவித்தொகை பெறும் அனைத்து முதியவர்களுக்கும் வீடு தேடி வந்து உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்” என்றுள்ளார் அமைச்சர்.