மாமியாரை அடித்தே கொன்ற மருமகன்

மாமியாரை அடித்தே கொன்ற மருமகன்

 

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் பொரசமரத்து காடு பகுதியைச் சேர்ந்த 39 வயதான ராமச்சந்திரன் ஒரு லாரி டிரைவர்.  இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் வீட்டில் தினமும் தகராறுதான்.  இதனால் வெறுத்துப்போன மகேஸ்வரி அவரது அம்மா பழனியம்மாள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.  கணவனை இழந்த பழனியம்மாள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.  இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பழனியம்மாளுக்கு உடம்பு சரியில்லாமல் போனதால் மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.

இவர் உடலில் இருந்த காயங்களைப் பார்த்த மருத்துவர்கள் விபரம் கேட்ட போது கீழே விழுந்து விட்டதாகச் சொல்லி சமாளித்துள்ளனர்.  எனினும் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பழனியம்மாள் கடந்த 24-ம் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து, அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்த போது மகேஸ்வரியின் குழந்தைகள், “எங்க அப்பாதான் பாட்டியை அடிச்சு, கழுத்துல காலால் மிதிச்சு பாட்டிய கொன்னுட்டாரு” என்று வந்திருந்தோரிடம் சொல்ல விவகாரம் பெரிய அளவில்  வெடித்தது.

மகேஸ்வரிக்கே அப்போது தான் விஷயம் தெரிய வந்துள்ளது.  உடனடியாக மகேஸ்வரி போலீசில் புகார் தந்ததை அடுத்து சூரமங்கலம் போலீசார், ராமச்சந்திரனைப் பிடித்து விசாரித்தனர்.  அப்போது தான் அவர் தனது குழந்தைகளை மாமியார் அடித்ததால் ஆத்திரமடைந்து மாமியாரைக் கீழே தள்ளி காலால் மிதித்தே கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது போலீசார் லாரி டிரைவர் ராமச்சந்திரனை கைது செய்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.  குழந்தைகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த மருமகனால் மாமியார் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– லெட்சுமி பிரியா