ஈ-பாஸ் கிடைப்பதில் சிக்கல்.  தூக்கில் தொங்கிய முதியவர்.

ஈ-பாஸ் கிடைப்பதில் சிக்கல்.  தூக்கில் தொங்கிய முதியவர்.

சென்னை ஆதம்பாக்கம் சிட்டி லிங்க் ரோட்டில் உள்ள சாந்தி நிகேதன் அடுக்குமாடி குடியிருப்பில் காதம்பரி பிளாக் ஏ 31 என்ற வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.  வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததால்  கதவை உடைத்து உள்ளே சென்றனர் அங்குள்ள அசோசியேஷன் நிர்வாகிகள்.  அங்கே வீட்டின் உரிமையாளர் 72 வயது சந்திரமோகன் ஹாலில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்துள்ளார்.  உடனே இது குறித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சந்திரமோகனின் மனைவி வசந்தி தேவி, மகள் ஷில்பா ஆகிய 3 பேரும் இந்த வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர்.  வசந்திதேவியின் அக்கா மகள் பெங்களூரில் குடியிருக்கிறார். அவரைப் பார்க்கக் கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருக்கு வசந்திதேவி, ஷில்பா ஆகியோர் சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக அவர்களால் சென்னைக்குத் திரும்பி வரமுடியவில்லை.  அதனால், பிப்ரவரி முதல் ஜூலை வரை 6 மாதங்கள் சந்திரமோகன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  முதுமை, தனிமை ஆகியவை தந்த மன அழுத்தம் இவரை வாட்டியுள்ளது.

மனைவி, மகளிடம் வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார்.  அவர்களும் உடனே பெங்களூருலிருந்து சென்னை வர இ-பாஸுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.  குடும்பத்தைப் பிரிந்த சூழலில் சந்திரமோகன், வீட்டின் ஹாலில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

அவரின் மரணம் குறித்து வசந்திதேவி, “கடந்த 9-ம் தேதி என்னிடம் போனில் பேசினார். எதற்காக இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை” என்று கண்ணீர் மல்கக் கூறுகிறார்.

“சந்திரமோகன், தற்கொலை செய்து சில நாட்கள் ஆகிவிட்டதால் சடலம் அழுகிய நிலையில் காணப்படுகிறது.  வசந்திதேவி, ஷில்பா ஆகியோர் பெங்களூரிலிருந்து சென்னைக்கு வந்த பிறகு சடலம் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இத்தனை நாட்களாகியும் இந்த கொரோனா கொடுமை சாவுகள் குறைந்தபாடில்லை.

– லெட்சுமி பிரியா