ஹப்பூர், உத்திரப் பிரதேசம்

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு முதியவருக்கு ரூ. 128 கோடி மின்  கட்டண பில் வந்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர் நகரில் உள்ள சாமரி என்னும் பகுதியில் வசிப்பவர் ஷமிம். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய வீட்டுக்கு 2 கிலோவாட் சக்தியில் ஒரு வீட்டு உபயோக மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள மின் கட்டண பில் இவரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இவர் மின் கட்டணமாக ரூ. 128, 45,95,544 செலுத்த வேண்டும்  என பில் வந்துள்ளது. ஷமீம் இது குறித்து மின் வாரியத்திடம் முறையிட்டுள்ளார். ஷமீம், “என கோரிக்கையை யாரும் மின் வாரியத்தில் கவனிக்கவில்லை. அவர்கள் எப்படி இவ்வளவு கட்டணம் கேட்கிறார்கள்? நான் பணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

நான் அங்கும் இங்கும் அலைந்தும் யாரும் இதைக் கண்டு கொள்ளவில்லை.  இது ஹப்பூர் நகருக்கான மொத்த மின் கட்டணம் ஆகும். நான் ஒரு ஏழை நான் ஆயுள் முழுவதும் உழைத்தாலும் இவ்வளவு வருமானம் கிடைக்காது. நான் ஒரு மின்விசிறியும் ஒரு குழல் விளக்கு மட்டுமே பயன்படுத்துகிறேன். அவ்வாறு இருக்க இத்தனை கட்டணம் எப்படி வர முடியும்?” எனக் கேட்டுள்ளார்.

இது குறித்து உத்தரப்பிரதேச மாநில மின் வாரிய பொறியாளர் :இது ஒரு தொழில்நுட்ப தவறு. அவருடைய தவறான பில்லைக் கொடுத்தால் உடனடியாக சரி செய்து தரப்படும். இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை. தொழில்நுட்ப தவறுகள் ஏற்படுவது பல துறைகளிலும் சகஜமான ஒன்றாகும்” எனக் கூறி உள்ளார்.

சென்ற வருடம் மே மாதம் மகாராஷ்டிராவில் ஒரு காய்கறி விற்பனையாளருக்கு இதைப் போன்று ரூ.8.64 லட்சம் கட்டணத்துடன் பில் வந்துள்ளது. மின் வாரிய அதிகாரிகள் இந்த கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். அந்த மன உளைச்சலால் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அது கணக்கிடுவதில் ஏற்பட்ட தவறு எனக் கண்டறியப்பட்டது.