ஞ்சாவூர்

ஞ்சாவூருக்கு வரும் ரெயிலில் தவறுதலாக ஏறி 5 நாட்களாகத் தவித்து வந்த முதியவர் வாட்ஸ்அப்  தகவலால் மகனிடம் சேர்க்கப்பட்டார்.

பரமக்குடியை அடுத்த சாத்தனூரில் நாகரெத்தினம் என்னும் 80 முதியவர் வசித்து வருகிறார்.   மனைவியை இழந்த இவரது மகன்களான ராஜாராம் மற்றும் குமார் ஆகியோர் ஓட்டுநராகப் பணி புரிந்து வருகின்றனர்.  நாகரத்தினம் முதுமை காரணமாக ஞாபகமறதி மற்றும் சரியாக பேச முடியாத நிலையில் உள்ளவர் ஆவார்.  இவர் தனது மூத்த மகன் குமாருடன் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் 26 ஆம் தேதி உதவித் தொகையை எடுக்க பரமக்குடி ஸ்டேட் வங்கிக்கு சென்று விட்டு ராமநாதபுரம் திரும்பும் போது தவறுதலாகத் தஞ்சை வழியாகச் சென்னை செல்லும் ரெயிலில் ஏறி உள்ளார்.   அவர் தஞ்சை ரெயில் நிலையத்தில் இறங்கி வழி தெரியாமல் அங்கும் இங்குமாக அலைந்துள்ளார்.  நேற்று முன் தினம் அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் மயங்கி விழுந்து விட்டார்.

அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரியாசுதின் என்பவர் அவரை தஞ்சை மாநகராட்சியின் ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்குள்ளவர் சரியாகப் பதில் அளிக்கவில்லை என்பதால் முதியவரை செல்வ மணி என்பவரின் வீட்டில் அமரவை வைத்து சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார்.  முதியவருக்கு தனது பெயர் மற்றும் தனது ஊர் சாத்தனூர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.

இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த போது அவர்கள் சாத்தனூரை சேர்ந்த இருவரின் செல்போன் எண்களை கொடுத்துள்ளனர்.  நகரத்தினத்தின் புகைப்படத்தை ரியாசுதின் அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி உள்ளார். அவர்கள் சத்தனூரில் உள்ள பலருக்கும் வாட்ஸ்அப் குழுமங்களுக்கும்  தகவலைப் பகிர்ந்துள்ளனர்.

இந்த தகவலை நாகரத்தினத்தைத் தேடிக்கொண்டிருந்த இளையமகன் ராஜாராம் பார்த்துள்ளார். அவர் ரியாசுதினுடன் செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு தஞ்சைக்கு வந்தார். ரியாசுதீன் உள்ளிட்டோருக்கு நன்றியைத் தெரிவித்த ராஜாராம் தனது தந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.