ஷாஜாபூர், மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்தாத ஒரு முதியவரைக் கட்டிலில் கட்டி வைத்து கொடுமை செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ராஜ்கர் மாவட்டத்தில் ஷாஜாபூரில் இருந்து சுமார் 38 கிமீ தூரத்தில் உள்ள சிற்றூரில் லட்சுமி நாராயண் என்னும் 80 வயது முதியவர் வசித்து வந்துள்ளார்.  இவர் உடல் நிலை சரி இல்லாததால் இவரை இவருடைய குடும்பத்தினர் ஷாஜாபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆரம்பத்தில் லட்சுமி நாராயன் குடும்பத்தினர் ரூ.6000 செலுத்தி உள்ளனர்.  அத்துடன் சிகிச்சைக்கு இடையில் மேலும் ரூ.5000 செலுத்தி உள்ளனர்.  முதியவருக்கு உடல்நிலை சரியானதும் அவரை வீட்டுக்கு அனுப்பும் போது அவர் ரூ.11270 செலுத்த வேண்டியது பாக்கி இருந்தது.    அவருடைய குடும்பத்தினரிடம் பணம் இல்லாமல் இருந்துள்ளனர்.

அவர்கள் எங்கெங்கோ முயன்றும் கொரோனா ஊரடங்கு காரணமாகப் பணத்தைப் புரட்ட முடியவில்லை.  எனவே அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம்  முறையிட்டுள்ளனர்.    ஆனால் மருத்துவமனை நிர்வாகம் லட்சுமி நாராயணை கட்டிலுடன் சேர்த்துக் கட்டி வைத்து அவர் எங்கும் செல்ல முடியாமல் வைத்துள்ளனர்.

இது குறித்து லட்சுமி நாராயண் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.  ஆட்சியர் தினேஷ் ஜெயின் உடனடியாக வட்டார துணை நீதிபதி மற்றும் ஒரு மருத்துவரை அனுப்பி முதியவரை விடுவித்து இது குறித்து விசாரிக்க உத்தரவு இட்டுள்ளார்.  இனி இவ்வாறு நடக்கக் கூடாது என மருத்துவமனை நிர்வாகத்துக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.