காசியாபாத்

‘ஓல்ட் மங் ரம்’ மதுவை உருவாக்கிய முன்னாள் பிரிகேடியர் கபில் மோகன் மறைவுக்கு பிரபலங்கள் டிவிட்டரில் அஞ்சலி செய்திகளை பதிந்துள்ளனர்

மோகன் மியாகின் மதுபான உற்பத்தி நிறுவனம் மிகவும் புகழ் பெற்றதாகும்.  மதுப் பிரியர்கள் பலரின் பேராதரவை பெற்ற ’ஓல்ட் மங் ரம்’ இந்த நிறுவனத்தின்  மது வகைகளில் ஒன்றாகும்.    இந்த நிறுவனம் 1855ஆம் ஆண்டு மியாகின் என்பவரால் துவங்கப்பட்டது.   பின்பு அது மோகன் டிஸ்டிலரிஸ் உடன் இணைந்து டையர் மியாகின் நிறுவனம் ஆனது.   சுதந்திரத்துக்குப் பின் இது கபில் மோகன் வசமானதால் அது மோகன் மியாகின் மதுபான ஆலை ஆகி 80களில் மோகன் மியாகின் லிமிடெட் ஆகியது.

கபில் மோகன்

இந்த நிறுவனத்தின் தலைவரான கபில் மோகன் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவராக இருந்தவர்.    இவருடைய பூசா ரோடு பங்களா என அழைக்கப்படும் மாளிகையில்  பல அரசியல் நிகழ்வுகளின் ஆலோசனை நடை பெற்றுள்ளது.   இந்திரா காந்தி மட்டுமின்றி சஞ்சய் காந்தி,  ராகுல் காந்தி ஆகியோருக்கும் மோகன் நெருக்கமாக இருந்து வந்தார்.  அது மட்டுமின்றி பாஜக தலைவர்களுடனும் நெருக்கமாக மோகன் இருந்துள்ளார்.

கடந்த 2010 ஆண்டு காங்கிரஸ் அரசு கபில் மோகனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.     88 வயதான கபில் மோகன் கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார்.    கடந்த சனிக்கிழமை அன்று அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.    ஏராளமானோர்  கபில் மோகனின் மறைவுக்கு டிவிட்டர் மூலம் இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.