வெள்ளத்தில் சிக்காத பழைய நிஜாம் ஆட்சிப் பகுதிகள்!

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரம் வெள்ளத்தால் சிக்குண்ட நிலையில், பழைய நிஜாம் ஆட்சிப் பகுதிகளில் மட்டும் பாதிப்பில்லை என்று தகவல்கள் உறுதிசெய்கின்றன.

அந்த காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வடிகால் மேலாண்மை அமைப்புகளின் சிறப்பை இந்த வெள்ளப்பெருக்கு உணர்த்துகிறது.

சார்மினார், மொகல்புரா, கில்வாட், ஷகாலிபண்டா, ஃபடே தர்வாஜா, புரானி ஹவேலி, நூர் கான் பஜார், ஹுசைனி ஆலம், தூத் பெளலி, என்ஜின் பெளலி, கோட்லா அலிஜா, புரானி ஹவேலி, பதர்கட்டி, பன்ஜே ஷா, பன்ச் மொகல்லா, சன்சல்குடா, குவாஸிபுரா, கர்வான், ஜியாகுடா, அஃப்ஸல்கன்ஜ், ஃபீல்கனா, ஜுமெராட் பஜார், கோல்கொண்டா மற்றும் ஃபலக்னுமாவின் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அப்பகுதிகளில் மக்கள்தொகை பெரியளவில் அதிகரித்தாலும்கூட, அந்த வடிகால் அமைப்பு இன்னும் சிறப்பானதாக இருக்கிறது. பெருமழைக்குப் பிறகான ஒரு மணி நேரத்திற்குள் அப்பகுதிகளில் வெள்ளநீர் வடிந்துவிட்டது.

அதேசமயம், கடந்த 1960களுக்குப் பிறகு காலனிகளாக மாற்றப்பட்ட பகுதிகளின் வீடுகளில் மட்டும் வெள்ளநீர் புகுந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 1908ம் ஆண்டு ஐதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்ட பிறகு, ஆறாம் நிஜாம் மீர் மஹ்பூப் அலி கான் என்பவர், சர் மோக்சகொண்டம் விஸ்வேஸ்வரய்யா என்பவரை, அந்நகரில் வெள்ள அபாய தடுப்பு கட்டமைப்பை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டு, அதனடிப்படையில் அந்தக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.