ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத வீரர்களின் சலுகை பறிப்பு.. சுரங்கத்தில் வேலை!

நெட்டிசன்: வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் வெளியாகும் பதிவுகளுக்கான பகுதி.

 ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்களின் முகநூல் பதிவு:

“இப்போ நீங்க படிக்கப்போற செய்தி உங்களுக்கு சிரிப்பை வரவழைக்குமா? வேதனையை வரவழைக்குமா என்று எனக்குத் தெரியாது.

அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் நம் இந்தியாவிலிருந்து 118 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர் என்பது நாம் அறிந்ததுதான். எவ்வளவோ எதிர்பார்ப்புகள் இருந்தும் நமக்கு, ஒரு தங்கப் பதக்கம் கூட கிடைக்கவில்லையே என்று ஒட்டுமொத்த தேசமும் ஏங்கியது. சரி ஒரு வெள்ளியும் வெண்கலமும் கிடைத்ததே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். வென்று வந்த இரு நபர்களும் பரிசு மழைகளில் நனைந்து கொண்டிருக்கின்றனர். தோல்வி பெற்றவர்கள் என்னவானார்கள்? எதுவும் நமக்குத் தெரியாது. இல்லையா?

சரி, ஒரு கற்பனை செய்துபாருங்கள். “இத்தனை நபர்கள் போயும் ஒருவர் கூட ஒரு தங்கமும் வாங்கவில்லை. இன்னும் பயிற்சிபெற்று சென்றோர்களில் ஒரு 5% வெற்றி பெற்றிருந்தால் கூட குறைந்தது ஒரு 6 பதக்கங்களுடனாவது வந்திருக்க வேண்டும். நம்மைவிட மிகச் சிறிய நாடுகளெல்லாம் பதக்கங்களை அள்ளிக் குவிக்கும் போது, ஒரு தங்ககம் கூட இல்லாமல் வருவது உலக அரங்க்கில் நாட்டிற்கு எவ்வளவு பெரிய அவமானம்? ஆகவே, வெல்லாது வந்த அனைவருக்கும் எல்லா சலுகைகளும் குறைக்கப்படும். இதுவரையில் ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் ஏதும் பணியில் இருப்பார்களேயானால் அந்த பதவி பறிக்கப்படும். எல்லோரையும் நெய்வேலி அனுப்பி நிலக்கரி வெட்டும் பணிக்கு அனுப்பப்படும்” என்று அரசு சொன்னால்??

சிரிப்பீர்களா? வேதனையடைவீர்களா?

எதுவாயினும் சரி, மேற்சொன்னது கற்பனையல்ல நிஜம். வடகொரிய அதிபர்   கிம் ஜாங் அவ்வாறு உத்தரவிட்டிருக்கிறார். இத்தனைக்கும் அனுப்பப்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் எண்ணிக்கை 36. ரியோ-டி- ஜெனிரோ செல்வதற்கு முன்னே அவர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது எல்லா வகைகளையும் சேர்த்து குறைந்தபட்சம் 17 பதக்கங்கள் இல்லாமல் நாடு திரும்பக்கூடாது என்று  அதிபர் கிம் ஜாங் உத்தரவு.

 அதிபர் கிம் ஜாங்
அதிபர் கிம் ஜாங்

பயிற்சியாளர்களும் மேலாளர்களும்,…ஆங்..அதென்ன பிரமாதம் குறைந்தது ஐந்து தங்கப் பதக்கங்களுடன் தான் நாடு திரும்புவோம். இது உறுதி” என்று அதிபருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வடகொரியா இரண்டு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் ஏழு பதக்கங்கள் மட்டுமே பெற்றது. அதிபருக்கு கோபம் உச்சிக்குச் சென்றுவிட்டது. ஏன் தெரியுமா?

தன்னுடைய எதிரியாக நினைக்கும் தென்கொரியா ஒன்பது தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என இருபத்தோரு பதக்கங்கள் பெற்று, வடகொரியாவை ஏளனம் செய்துவிட்டதாம். இது அவருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாம். அதனால் மேலே உங்களை கற்பனை செய்யச் சொன்ன அனைத்து தண்டனைகளையும் நிஜமாகவே கொடுக்கப்போகிறாராம்.

நிலக்கரிச் சுரங்கத்தில் போய் என்ன செய்வது என்று பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்களாம்!”