புற்றுநோயிலிருந்து மீளப் பாக்ஸர் டிங்கோ சிங் மரணப் போராட்டம்

1998 ஆம் ஆண்டில் பாங்காக்கில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 19 வயதான மணிப்புரி சிறுவன் டிங்கோ சிங் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்றார்.

இந்தியா மிகுந்த உற்சாகத்தோடு டிங்கோ சிங்கை பாராட்டியதோடு, அவருக்கு அர்ஜுனா விருது, அரசு வேலை மற்றும் ஒரு மூன்று படுக்கையறை வீட்டினை பரிசாகவும் வழங்கியது. அதனைத் தொடர்ந்து 2013 ல் பத்மஸ்ரீ பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

36 வயதாகும் டிங்கோ சிங்கிற்கு தற்பொழுதும் அரசு வேலை உள்ளது. பயிற்சியாளராகவும் இருக்கின்றார். ஆனால், கடந்த நான்கு மாதங்களில், அவருடைய கல்லீரலை 70% கேன்சருக்கு பலி கொடுத்துவிட்டார். கேன்சர் சிகிச்சை செலவிற்காகத் தனது வீட்டை விற்றுவிட்டார். ஜனவரி 6 அன்று 14 மணி நேரம் தொடர்ந்து கல்லீரல் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்பொழுது தில்லி ஷாபூர், ஜாட் கிராமத்தில் அவரது நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வருகின்றார். அவரது மனைவி அவருக்குப் பிடித்த உணவைச் சமைத்து அவரை உண்ணவைக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றார். மிகவும் களைப்பாய் உள்ள டிங்கோ சிங் ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்குள் சுருண்டு படுத்துவிடுகின்றார்.

டிங்கோ சிங்கின் மனைவி கூறுகையில், “ கடந்த ஆண்டு ஜூலை மாதம், அவருக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. பிறகு ஒரு மாதத்தில் அவரது எடை 3-4 கிலோ குறைந்தது. உடல்நிலை சீரடையாததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தபோது தான் அவருக்குக் கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு 25 கிலோ எடையை இழந்துள்ள டிங்கோ சிங், இன்னும் ஆறு சுற்று என்று கீமோதெரபி சிகிச்சையைக் கடந்து உடல்நிலை தேறுவாரா எனப் பயமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

கடந்த ஜூலை முதல் சிகிச்சை செய்ய, 10 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். எங்கள் இரு குழந்தைகளை விடுதியில் விட்டுள்ளோம். அவர்கள் படிப்பு செலவும் மாதம் 10,000 ஆகின்றது. அவருக்கு அரசு வேலை இருப்பதால், சிகிச்சை செலவில் ஒரு பகுதியை அவர் பணிபுரியும் அலுவலகம் ஏற்றுள்ளது. எனினும், அன்றாடச் செலவுகளுக்கு அல்லல் படுகின்றேன். கருணையுள்ளவர்கள் நிதியுதவி அளித்து உதவுங்கள் எனக் கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்” டிங்கோ சிங் மனைவி பபை.

மனிதாபிமானத்துடன் உதவி செய்ய விரும்புபவர்கள் பபையைத் தொடர்பு கொண்டு உதவுமாறு பத்திரிக்கை.காம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். டிங்கோ சிங் மனைவி பபை யின் தொடர்பு எண் : 8131830664.

 

கார்ட்டூன் கேலரி