டில்லி:
ஜூனியர் வீரர் ஒருவர், தனது உணவில் ஊக்கமருந்தை கலந்ததாகவும், தன்னை ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளாமல் தடுக்க மிகப்பெரிய சதி நடந்துள்ளதாகவும் இந்திய மல்யுத்த வீரர்  காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் அடுத்தமாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பில் 120 வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.  இவர்களில்  74 கிலோ எடைபிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்க இருந்த  நர்சிங் யாதவ்வும் ஒருவர்.
ஆனால், தேசிய ஊக்கமருந்து தடுப்புக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்டு மருந்து உட்கொண்டது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து நர்சிங் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.

நர்சிங் யாதவ்
நர்சிங் யாதவ்

இந்த நிலையில், ஹரியானா மாநிலம், சோன்பட் மாவட்டத்தில் உள்ள ராய் காவல் நிலையத்தில் நேற்று நர்சிங்  புகார் ஒன்றை அளித்தார். அதில், சோன்பட் சாய் மையத்தில் தான், பயிற்சி எடுத்த போது, தனது உணவில் ஜூனியர் வீரர் ஜித்தேஷ் என்பவர் ஸ்டீராய்டை கலந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், செல்வாக்கு மிகுந்த சிலரின் சதியால், ஊக்கமருந்து விகாரத்தில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும் தனது புகாரில் நர்சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரையடுத்து, சில சட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு ஜித்தேஷ் மீது உணவில் விஷம் கலந்தது,  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது  ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.