Random image

‘ஓம் கம் கணபதயே நம’ விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

விநாயகரை வழிபடும்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக வணங்கப்படுபவர் விநாயகர். முழு முதற்கடவுள் என அழைக்கப்படுபவர்.  நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. அதனால்தான் நாம் தொடங்கும் ஒவ்வொரு செயலுக்கு முன்பாகவும் கணபதி மந்திரம் சொல்கிறோம்.

பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.

விநாயகர் எளிமையான கடவுள்.  களிமண், சாணம், மஞ்சள் என எதையும் பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார். எளிதில் கிடைக்கும் அருகம்புல், எருக்கு போன்ற பூக்களால் அர்ச்சனை செய்தாலும் ஏற்றுக் கொள்ள கூடியவர்.

குளந்தங்கரை, அரசமரத்தடி, தெருமுக்கு என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் விநாயகர். வெல்லம், கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்ற பொருட்களை நிவேதனம் செய்ய மகிழ்வார். அத்தகைய கடவுளுக்கு மனம் குளிர விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்கிறது விநாயக புராணம்.

பரந்த இவ்வுலகில் நல்லவைகளை மட்டுமே கூர்ந்து நோக்க வேண்டும் என்பதையே விநாயகரின் கூரிய சிறிய கண்கள் உணர்த்துகின்றன.

செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விநாயகரின் முறம் போன்ற செவிகள் குறிக்கின்றன.

விநாயகரின் ஒரு கையில் பாசம் உள்ளது, அது படைத்தலைக் குறிக்கின்றது.

தந்தத்துடன் கூடிய‌ தும்பிக்கை காத்தலைக் குறிக்கின்றது.

அங்குசம் ஏந்தியகை அழித்தலைக் குறிக்கின்றது.

மோதகம் ஏந்திய கை மறைத்தலைக் குறிக்கின்றது. உ

யர்த்திய கை அருளலைக் குறிக்கின்றது.

இவ்வாறு ஐந்து கரங்களும் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன.

விநாயகரின் பெரிய வயிறு எல்லா உயிர்களும், உலகங்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிக்கின்றது.

விநாயகர் மகாபாரதத்தை எழுதுவதற்கு கொம்பை ஒடித்ததால் கொம்புகள் ஞானத்தைக் குறிக்கின்றன.

விநாயகரின் பெரிய திருவடிகள் நல்லனவற்றை செய்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதைக் குறிக்கின்றன.

மொத்தத்தில் விநாயகர் திருவுருவம் வெளித் தோற்றத்தைவிட அறிவுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றது.

பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார்.

கணபதியை வணங்கும்போது கூற வேண்டிய மந்திரங்கள்

மூல மந்திரம்: ஓம் கம் கணபதயே நம

1. விநாயகர் சகஸ்ரநாமம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

2. விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஓம் தத்புருஷாய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹி 
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

மூஷிக வாகன மோதக ஹஸ்த 
சாமர கர்ண விளம்பித சூத்ர 
வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
விக்ன விநாயக பாத நமஸ்தே.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
கணபதியைக் கைதொழுதக் கால்.

விநாயகர் காயத்ரி மந்திரம்:

வக்ரதுண்டாய ஹீம் 
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோமே எதற்காக?

​”தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது என்பது பொருள்.

விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.

விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான்,  ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக் கிறார்.

சிதறு தேங்காய் என்ற உடைக்கிற வழக்கம் தமிழ் தேசத்துக்கு மட்டுமே உரியது. இப்படிச் சிதறிய துண்டங்கள் யாருக்கு உரிமை என்றால் குழந்தைகளுக்குத்தான்.

அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத் ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை. சிரசு யானையின் தலை. பெரிய வயிறு. பெரிய உடம்பு. அவருக்கு ‘ஸ்தூல காயர்’ என்றே ஒரு பெயர். மலைபோல் இருக்கிறார். ஆனாலும் அவர் சின்னக் குழந்தை!

சரி, குழந்தைக்கு எது அழகு? குழந்தை என்றால் அந்தப் பருவத்தில் நிறையச் சாப்பிட வேண்டும். உடம்பு கொஞ்சம்கூட இளைக்கக்கூடாது. ஒரு சந்நியாசி நிறையச் சாப்பிட்டுக் கொண்டு பெரிய சரீரியாக இருந்தால் அது அவருக்கு அழகல்ல. வயசாகிவிட்டால் ராத்திரி உபவாசம் இருப்பார்கள்.

குழந்தை அப்படி இருப்பது அழகா? குழந்தை என்றால் தொந்தியும் தொப்பையுமாகக் கொழு கொழுவென்று இருந்தால்தான் அழகு. நிறையச் சாப்பிடுவதுதான் அழகு. குழந்தைகள் நல்ல புஷ்டியாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குழந்தைச் சாமியே காட்டிக் கொண்டிருக்கிறார், கையில் மோதகத்தை வைத்துக்கொண்டு.

இவரோ யானை மாதிரி இருக்கிறார். அதற்கு நேர் விரோதமான சின்னஞ்சிறு ஆகிருதி உடையது மூஞ்சூறு. இதை அவர் தம் வாகனமாக வைத்துக் கொண்டி ருக்கிறார். மற்ற ஸ்வாமிகளுக்காவது ஒரு மாடு, ஒரு குதிரை, ஒரு பட்சி, என்று வாகனம் இருக்கிறது. இவரோ தாம் எத்தனைக்கு எத்தனை பெரிய ஸ்வாமியாக இருக்கிறாரோ, அத்தனைக்கு அத்தனை சின்ன வாகனமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

எந்த ஸ்வாமியை உபாஸிப்பதானாலும் முதலில் விநாயகருடைய அநுக்கி ரகத்தைப் பெற்றுக் கொண்டால்தான் அந்தக் காரியம் விக்கினம் இல்லாமல் நடைபெறும். அவரையே முழுமுதற் கடவுளாக, பிரதான மூர்த்தியாக வைத்து உபாசிக்கிற மதத்துக்கு காணபத்தியம் என்று பெயர்.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது.

ஒரு சமயம் மஹா விஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது.

ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

“தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக.

You may have missed