திருச்சி,

சமயபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ‘ஓம் சக்தி பராசக்தி’ என்று விண்ணதிர கோஷமிட்டனர்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்திபெற்றது திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்து சமய ஆகம விதிகளின் படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம்கும்பாபிஷேகம் நடந்தது.

தற்போது பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால், ரூ.30 கோடி செலவில் விரிவாக்க பணிகள் நடை பெற்றன. முன்புற மண்டபங்கள் விரிவு படுத்தப்பட்டது. மேலும் வடக்கு, தெற்கு கோபுரங்களுக்கு புதிய வாசல்கள் அமைக்கப்பட்டன.

மேலும் அம்மனின் திருமேனி வர்ண கலாபம் செய்யப்பட்டது. விநாயகர் சன்னதி இடமாற்றம் செய்யப்பட்டு கன்னி மூலையில் வைக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி மாரியம்மன் மூலஸ்தானம் பாலாலயம் செய்யப்பட்டு கருவறையை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து  இன்று(பிப்ரவரி 6-ந்தேதி)  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான  யாக சாலை பூஜைகள் கடந்த 3-ந்தேதியே தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இன்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும்  யாகசாலை பூஜைகள் தொடங்கி த்ரவ்யா ஹூதி, 5.30 மணிக்கு பரி வார பூர்ணாஹூதி, 5.45 மணிக்கு பிரதானம் பூர்ணா ஹூதி, தீபாராதனை நடந்தது.

காலை 6 மணிக்கு யாத்ரா தானம் கடங்கள் புறப்பட்டன. சரியாக காலை 7.10 மணிக்கு மாரியம்மன் கோவில் தங்க விமானம், நூதன ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பரிவார விமானங்கள், மூலவர், மேற்கு, வடக்கு, தெற்கு வாசல் கோபுரங்கள், விநாயகர், உற்சவர் அம்பாள் சன்னதி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

திருப்பரங்குன்றம் சிவஸ்ரீ ராஜாபட்டர், திருவானைக்காவல் சந்திரசேகர சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றினர்.

அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்ற பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர்.

கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகளை நடத்தி தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து பைப் மூலம் பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது.

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி  இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.