டில்லி:

ஒலிம்பிக் இலக்கு போடியம் திட்ட பட்டியலில் புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இத்தாலி நாட்டிற்காக போட்டிகளில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவிந்தர் சிங் காங் அறிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டு லண்டனில் நடந்த சர்வதேச தடகள சங்கங்களின் கூட்டமைப்பின் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஈட்டி எறிதல் பிரிவில் தேவிந்தர் சிங் இறுதி போட்டிக்கு நுழைந்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்.

இது குறித்து அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறுகையில், ‘‘எனக்கு ரூ. 7 லட்சத்துக்கு மேல் கடன் உள்ளது. பணம் குறித்த கவலை எனக்கு அதிகரித்தள்ளது. இத்தாலி அகாடமி ஒன்று எனக்கு மாதம் ரூ.12.80 லட்சம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த முன்வந்துள்ளது. இதற்கு நான் இத்தாலி சார்பில் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும். தற்போது உள்ள நிலையே தொடர்ந்து நீடித்தால் இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து வெளியேறி இத்தாலிக்காக விளையாட வேண்டி வரும்’’ என்றார்.

ஒலிம்பிக் இலக்கு போடியம் திட்ட குழு சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டு மற்றும் 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் எதிர்வரும் 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான 107 தடகள வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை தேவிந்திர் பார்த்தபோது அதிர்ச்சியடைந்துவிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ செல்போனில் இந்த பட்டியலை பார்த்தபோது என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. இதை கண்டு அதிர்ச்சியடைந்துவிட்டேன். நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை.

உலக சாம்பியன்ஷிப் தகுதி பெறாத பலர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். எப்படி அவர்களை தேர்வு செய்துவிட்டு என்னை புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை. இந்த தேர்வு நேர்மையாக நடக்கவில்லை. என்னை பட்டியலில் இருந்து புறக்கணித்ததற்கான காரணத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தை தேவிந்தர் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இது வரை எந்த பதிலும் இல்லை. எனினும் யாராவது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

மேலும், நாளை முதல் தேசிய திறந்த தடக சாம்பியன் ஷிப் போட்டிகள் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதன் மூலம் தேர்வு குழு மறு பரிசீலனை செய்யும் வகையில் தேவிந்தர் அடுத்த கட்ட அழுத்தம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘இது நாள் வரை நான் மேற்கொண்ட சாதனைகளால் தேர்வு குழுவினர் திருப்தி அடையாமல் இருந்திருக்கலாம். நான் கண்டிப்பாக தேசிய சாதனையை உடைப்பேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் இதே நிலை நீடித்தால் இத்தாலி குடிமகனாக மாறுவதை தவிர வேறு வழியில்லை’’ என்றார்.