சென்னை:

மிழகத்தில் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விமான கட்டணத்தை விட அதிக அளவு வசூலிக்கப்படுகிறது. இது பயனர்களிடையே கடுமையான மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. தூக்கிக்கொண்டிருக்கும் தமிழகஅரசு, கண்விழித்து,  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்….

தமிழர்களின் பாரம்பரிய  பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சென்னை போன்ற பல நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை. இந்த சமயங்களில் தமிழக அரசு, பொதுமக்களின் தேவைக்கேற்ப பேருந்துங்கள் இயக்காமல்,  ஓரளவே சிறப்பு பேருந்துகளை இயக்குவதால், ஏராளமானோர் தனியார் பேருந்துளை நோக்கி செல்கிறார்கள்.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் தனியார் பேருந்துங்கள், தங்களது கட்டணத்தை கண்ணை மூடிக்கொண்டு பல மடங்கு உயர்த்தி வருகின்றன. சென்னையில் இருந்து விமானத்திற்கு செல்லும் பயண கட்டனத்தை விட தனியார் பேருந்து கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

பண்டிகை கால நாட்களில் தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வழக்கம் போல அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு எச்சரிக்கை அறிவிப்பை  மட்டுமே வெளியிடுவார்… ஆனால், அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மீண்டும் குறட்டை விடத் தொடங்கி விடுவார்.

தனியார் பஸ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த மாநில அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், தனியார் பஸ் கட்டணங்களை கட்டுப்படுத்த விதிகளை திருத்துவதில் மாநில போக்குவரத்து துறை காட்டிய தயக்கம்  போன்றவற்றால், தனியார் பேருந்துகளின் வளர்ச்சி அபரீதமா‘கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 200 க்கும் மேற்பட்ட புதிய தனியார் பேருந்துகள் பதிவு செய்யப்படுகின்றன.

போக்குவரத்துத் துறையின் செயலற்ற தன்மையால்,  பயணிகளின் உயிரும் கேள்விக்குறியாகி வருகிறது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் பண்டிகை காலங்களில் ஏராளமான ஆம்னி பேருந்துகளும் காளான்கள் போல முளைத்து வருகின்றன.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  அக்டோபர் 26ந்தேதி வருகிறது. சென்னையில் பணி நிமித்தமாக வசித்து வரும் லட்சக்கணக்கானோர் தீபாவளியை தங்களது குடும்பத்தோடு தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதற்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனர். அரசு சார்பில் 4,600 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு  தீபாவளிக்கு சில நாட்களுக்கு  முன்பே தொடங்கும் சூழல் உள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது உள்ளது.

அதே வேளையில்,தனியார் பேருந்து நிறுவனங்கள் இப்போதே தீபாவளி பேருந்து கட்டணங்களை அறிவித்து பீதியை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பேருந்துகளின் கட்டணங்களை கேட்டாலே தலைசுற்றி மயக்கம் வரவழைக்கிறது.

சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல கட்டணம் 2,728 ரூபாய் மட்டுமே. சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல அரசு பேருந்தின் கட்டணம் 450 ரூபாய்.

ஆனால், தனியார் பேருந்தில் சாதாரண நாட்களில் 850 முதல் 1200 வரை வசூலிக்கப்படுகிறது. தற்போது  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குறைந்த பட்ச கட்டணம் ரூ.1500 முதல்  அதிகபட்சமாக ரூ.2200 வரை யும், ஏசி படுக்கை வசதி உள்ள பேருந்தில் ரூ.3000 வரையும்  வசூலிக்கப்படுகிறது. இது தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு ரூ.3 ஆயிரத்தைத் தாண்டும்  வாய்ப்பும் உள்ளது.

அதுபோல, சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்ல அரசு பேருந்தின் கட்டணம் ரூபாய் 700. இதே ஏசி இல்லாத தனியார் பேருந்தில் சாதாரண நாட்களில் 1200  ரூபாய்  முதல் 1500 வரை வசூல் செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் 1600 முதல் 2500 வரையும் ஏசி பேருந்தில் 2500 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதுபோல் திருநெல் வேலிக்கு செல்ல அரசு பேருந்தின் கட்டணம் ரூபாய் 650. தனியார் பேருந்தில் 850. ஆனால் பொங்கலோ தீபாவளிக்கோ 2000 முதல் 2700 வரை வசூலிக்கப்படுகிறது. கோவைக்கு சாதாரணமாக ரூ.800 முதல் ரூ.1200 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் தற்போது ரூ.1700 முதல் ரூ.2500 வரை வசூலிக்கப்படுகிறது.

ஆனால், இதுகுறித்து கூறும் தனியார் பேருந்து நிறுவனங்கள், தங்களது பேருந்துகள் நவீன வசதியுடன், சொகுசான இருக்கைகள், படுக்கைகள் கொண்டுள்ளதால், அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், மேலும், அரசுப் பேருந்தில் சென்றால் சொந்த ஊர்களுக்கு தாமதமாக செல்ல நேரிடுவதால், விரைந்து செல்லும் நோக்கில் பலர் தனியார் பேருந்து களை நாடி வருகின்றனர் என்று தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற  மக்களின் நாடித்துடிப்பை அறிந்துகொண்ட ஆம்னி பஸ் நிறுவனங்கள், மக்களின் மன நிலையை தங்களது சாதகமாக பயன்படுத்தி, பயண கட்டணத்தை தங்கள் மனம் போன போக்கில் நிர்ணயித்து கொள்கின்றனர்.

நிலைமை இப்படி இருக்க அரசு பேருந்து ஓட்டுநர்களோ, தங்களுக்கு பேருந்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே ஓட்ட முடியும் என்பதால், ஆம்னி பேருந்துகளின் வேகத்துக்கு அரசு பேருந்துகளை இயக்க முடியாது. இதன் காரணமாக பயண நேரம் அதிகமாகிறது. இன்றைய இயந்திர உலகில், அனைவரும் விரைவான பயணத்தையே எதிர்பார்க்கின்றனர். தற்போதுதான்  அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளுக்கு இணையாக நவீன வசதிகளுடன் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோன்று  வெளி ஊர்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் சிறப்பான வசதிகளுடன் இயக்கப் பட்டாலே, தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளை தானாகவே குறைந்த விடும் என்றும் தெரிவிக்கின்றனர்.

தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்கை தொடர்பாக, பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டில், 1,448 தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது, இதிக வேகத்தில் சென்றதற்காக போக்குவரத்து போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அது என்ன ஆனது என்றே தெரிய வில்லை.

இதுகுறித்து கூறிய போக்குவரத்துத் துறையின் அதிகாரி ஒருவர், எந்தவொரு ஓட்டுநருக்கும் எட்டு மணி நேரத்திற்கு மேல் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை என்றும், ஆனால், ஆம்னி பேருந்து ஓட்டுனநர்களோ, நிறுவனங்களோ விதிகளை மதிப்பது இல்லை என்றும், அவர்களின் பேருந்து கட்டணங்கள் குறித்து, பொதுமக்கள் யாரும்  புகார் கொடுக்க முன்வருவது  இல்லை என்றும் கூறி, தங்கள் மீது குற்றம் இல்லாத வகையில் நாசூக்காக தவிர்த்து விடுகிறார்கள்…

ஆம்னி பேருந்துகளின் கட்டண விகிதங்கள், ரெட்பஸ் போன்ற இணையதளங்களில் திறந்த நிலையில், காணப்படும் நிலையில், இதைக்கொண்டே போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்…. இதுதான் நிதர்சன உண்மை….

தமிழக அரசு போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கி வருகிறது. மேற்கண்ட தொலைபேசி எண் மூலம், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்யும்போது அதிகக் கட்டணம் வசூலித்தல் சம்பந்தமான குறைகள் குறித்து பொது மக்களும் புகார் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இந்த தொலைபேசியில், இந்த செய்தி பதிவிடும் சமயத்தில் பலமுறை தொடர்பு கொண்டும், போனை யாரும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் விழாக்காலங்களில் தொடர்ந்து ஆம்னி பேருந்து நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக கட்டண உயர்வை செயல்படுத்தி வருகிறது. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசும், போக்குவரத்து துறையும், நடவடிக்கை எடுக்காமல் தூக்குவதுபோல பாசாங்கு காட்டி வருகிறது….

இந்த பல மடங்கு கட்ட கட்டணக் கொள்ளை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? தூக்கிக்கொண்டிருக்கும் தமிழக அரசு எப்போது விழிக்கும்?

பொறுத்திருந்து பார்ப்போம்.