Random image

காந்தி ஜெயந்தி : சைவ உணவுகள் மட்டுமே இந்திய ரெயில்வே வழங்கும்

டில்லி

காந்தி ஜெயந்தி அன்று இந்திய ரெயில்வே சைவ உணவுகள் மட்டுமே வழங்க உள்ளது.

இந்திய ரெயில்வேயில் பயணிக்கும் பயணிகளுக்கு ஐஆர்சிடிசி மூலம் உணவு வழங்கப்படுகிறது.    ராஜ்தானி போன்ற சொகுசு ரெயில்களில் உணவுக்கும் சேர்ந்து கட்டணம் வசூலிக்கப் படுகின்றது.  அத்தகைய ரெயில்களில் பதிவு செய்வோருக்கு அவரவர் விருப்பத்துக்கிணங்க சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகின்றன.

வரும் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி அன்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.   காந்தி தனது வாழ்நாள் முழுவதும் புலால்  மறுப்பு கொள்கையை கடைபிடித்தவர் ஆவார்.  எனவே அவருடைய பிறந்த நாளை ஒட்டி அன்று ரெயில்களில் சைவ உணவு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

இது குறித்து இந்திய ரெயில்வே, “வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரெயில்வே  கண்காட்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகளை நடத்த உள்ளது.   அத்துடன் சுதந்திரத்துக்காக மகாத்மா காந்தி நடத்திய போராட்டங்கள் குறித்தும் பல விளக்கபடங்கள் வைக்கப்பட உள்ளன.   முக்கியமாக காந்தி ஜெயந்தி அன்று ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சைவ உணவு மட்டுமே வழங்க வேண்டும் என ஐஆர்சிடிசி க்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என அறிவித்துள்ளது.