டில்லி,

பாகிஸ்தான் ராணுவத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் குல்புஷன் ஜாதவை மீட்டுக் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பலுசிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்புஷன் ஜாதவை, கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பளித்தது. இது தொடர்பான கேள்வி மக்களவையில் எழுப்ப பட்டது.

அப்போது பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

சட்டத்தையும், விதிகளையும்  பாகிஸ்தான் அரசு உதாசீனப்படுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

ஈரானில் தொழில் செய்துவந்த குல்புஷனை பாகிஸ்தான் உளவு அமைப்பு கடத்தி, இந்தியாவுக்கு உளவு பார்த்தாக குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறிய ராஜ்நாத் சிங், குல்புஷன் ஜாதவை மீட்டு இந்தியா கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.