திருவனந்தபுரம்: குடியரசு தினத்தன்று, கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது.

சர்ச்சைக்குரிய CAA ஐ ரத்து செய்யக் கோரி கேரள சட்டமன்றம் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாளை ஆளும் கட்சி மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறது.  சிபிஎம் தலைமையிலான ஆளும் எல்டிஎப் மற்றும் சிபிஐ, என்சிபி, ஜேடிஎஸ், ஜேடியு மற்றும் ஜேஎஸ்எஸ் போன்ற உட்பட கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் மனித சங்கிலியில் கலந்து கொள்ள உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் கூறி இருக்கிறார்.

சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, வருவாய் அமைச்சர் சி.சந்திரசேகரன் ஆகியோர் காசர்கோடில் மனித சங்கிலியை தொடங்கி வைப்பார்கள். முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சிபிஐ மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் இணைவார்கள்.

மூத்த சிபிஎம் தலைவரும், பொலிட்பீரோ உறுப்பினருமான எம்.ஏ. பேபி காளிக்காவிளையில் இணைவார். மாநில அமைச்சரவையில் மூத்த எல்.டி.எப் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் மனித சங்கிலியின் ஒரு பகுதியாக இணைவர். கோட்டயம் மற்றும் பதானம்திட்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆலப்புழாவில் இணைந்து கொள்வர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 3:30 மணியளவில் ஒத்திகை நடைபெறும். மாலை 4 மணியளவில், மனித சங்கிலி வடிவம் நடக்கும். அதன் ஒரு பகுதியாக அரசியலமைப்பின் முன்னுரையை வாசிப்பவர்கள் பின்னர் அரசியல் அமைப்பையும் நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுப்பார்கள்.

மனித சங்கிலியைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறும். மனித சங்கிலி மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் வழியாக செல்லும்.