லகாபாத்

கும்ப மேளாவில் சிவராத்திரி அன்று திரிவேணி சங்கமத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர்.

அலகாபாத் நகரில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிப்பதாக ஐதிகம் உள்ளது. இந்துக்களுக்கு இது மிகவும் புனிதமான இடமாகும். இங்கு புனித நீராடினால் பாவங்கள் தொலையும் என நம்பிக்கை உள்ளது. சிவராத்திரி அன்று இங்கு ஏராளமானோர் புனித நீராடி சிவனை வணங்குவது வழக்கம்.

தற்போது இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதை ஒட்டி தினமும் ஏராளமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி வருகின்றனர். நேற்று சிவராத்திரி தினம் என்பதால் திரிவேணி சங்கமத்தில் எராளமானோர் புனித நீராடி உள்ளனர். காலயில் இருந்தே நதியின் அனைத்து கரைகளிலும் மக்களின் தலைகள் மட்டுமே தெரிந்தன.  நேற்று மாலை வரை 1 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர்.

நேற்று லேசாக மழை தூறிய போதும் மக்கள் தொடர்ந்து புனித நீராடி வந்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு சூரியன் தெரியவே அனைவரும் சூரியனை பார்த்து வணங்கினர். பெரும்பாலானோர் அப்போது யோகாவில் ஒருவகையான சூரிய நமஸ்காரம் செய்து சூரியனை வழிபட்டனர். கும்ப மேளா சென்ற மாதம் 15 ஆம் தேதி அன்று தொடங்கியது. வரும் மாதம் 15 ஆம் தேதி வரை விழா நடைபெற உள்ளது.