வாஷிங்டன்:
மெரிக்க தேர்தல் முடிவு: மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் வெற்றி பெற்று 264-214 என்ற கணக்கில் பைடன் முன்னிலை பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று தற்பொது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வெற்றி பெற 270 வாக்குகள் வேண்டிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 248 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். அதிபர் தேர்தலில் வெற்றியை முடிவு செய்யும் மாநிலங்களாக கருதப்படும் மிச்சிகன், விஸ்கான்சின் ஆகியவற்றில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம் வடக்கு கரோலினா, பென்னிசில்வேனியா, ஜியார்ஜியா ஆகிய இடங்களில் டிரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் டிரம்ப் தரப்பில் இருந்து, வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் டெலாவேர் மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தனது கட்சியின் ஆதரவாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், “தேர்தல் முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நாம் வெற்றி பெற்று விட்டோம் என்பதை அறிவிப்பதற்காகவும் நான் தற்போது வரவில்லை. ஆனால் நாம் இந்த தேர்தலில் வெற்றியை நெருங்கிவிட்டோம். ஓவ்வொரு வாக்குகளும் எண்ணப்படும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.

கடந்த 2 நூற்றாண்டுகளாக அமெரிக்கா ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட, வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான மக்கள் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். இதன் மூலம் ஜனநாயகம் தான் அமெரிக்காவின் இதயத்துடிப்பு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று ஜோ பைடன் தெரிவித்தார்.