மறுபடியும் மோடியைக் குத்தும் பாஜக சுப்ரமணியன் சுவாமி.

மறுபடியும் மோடியைக் குத்தும் பாஜக சுப்ரமணிய சுவாமி.

பிரதமர் மோடியை பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீண்டும் தாக்கி உள்ளார்.

கட்சி மேலிடத்துடன் ஒத்துப்போகாத குணம் கொண்ட தலைவர்களில் முக்கியமானவர்- நம் ஊர் சுப்ரமணிய சுவாமி.

சசிகலா, தமிழக அரசியலில் மீண்டும் தலை எடுக்கக்கூடாது என்பதற்காக பகீரதப் பிரயத்தனங்களில் பா.ஜ.க.தலைமை முனைப்புக் காட்ட-

பா.ஜ.க. எம்.பி.யான சுப்ரமணிய சுவாமியோ தமிழ்நாட்டுக்கு வந்து விட்டால் , சசிகலா புராணம் தான் பாடுகிறார்.

ரஜினியை பா.ஜ.க.பக்கம் இழுக்க மோடியும் அமீத் ஷாவும் படாதபாடு படும் நிலையில் சுவாமி, ரஜினியைச் சீண்டுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரும் விவகாரத்திலும், மத்திய அரசின் நிலைப்பாட்டில் இருந்து நேர் மாறாக நிற்கிறார்.

‘’ ட்ரம்பின் இந்திய வருகை நமக்குப் பலன் அளிக்காது. அவரது வருகை கவலையை ஏற்படுத்தியுள்ளது.’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரி கருத்து தெரிவித்துள்ளார்.

எச்சூரியின் கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறார், சுப்பிரமணிய சுவாமி.

‘’ட்ரம்ப் தனது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவே இங்கு வருகிறார். அவர் வருவதால் இந்தியாவுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை’’ என்று திருவாய் மலர்ந்துள்ளார், சுவாமி.

அதோடு விடவில்லை.

‘’ ட்ரம்ப் இந்தியா வருவதால் சில ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம்.அதனால் அவர்களுக்குத் தான் லாபம். ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பார்கள். அவற்றை நமக்கு ஓசியிலா கொடுக்கப்போகிறார்கள்?’’ என்று கேள்வி எழுப்பி பா.ஜ.க.மேலிடத்தை அதிர வைத்துள்ளார், சுப்பிரமணிய சுவாமி.

 

– ஏழுமலை வெங்கடேசன்