வரக்கூடிய சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: வரக்கூடிய சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று அவர் பேசியதாவது: எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும், பழனிசாமி ஆட்சி ஒரு மாதம் தான் இருக்கும், 3 மாதங்கள் தான் நீடிக்கும் பிரசாரம் செய்தனர். அதையெல்லாம் முறியடித்து 4 ஆண்டு காலம் நிறைவு பெற்று, 5வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை அதிமுக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது.

பதவி ஏற்றதில் இருந்து பல திட்டங்களை வழங்கி வெற்றி நடை போடும் தமிழகம் என்ற அளவுக்கு ஏற்றம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சியினர் கூட மூக்கின் மேல் விரலை வைத்து பாராட்டுகிற அரசு அதிமுக அரசு என்பதை எடுத்து காட்டியுள்ளோம்.

ஆட்சிக்கு உறுதுணையாக விளங்கிய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு நன்றி. அதேபோல், முழு ஒத்துழைப்பு அளித்த அமைச்சர்களுக்கு மனமார நன்றி. சபாநாயகர், துணை சபாநாயகர், எம்.எல்.ஏக்கள், அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கண்ட கனவுகளை நனவாக்கும் விதமாக சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சி அமைப்போம். எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று பேசினார்.