மிரட்டிய ஹைடன் பிரியாணி சமைத்துப் போட்டது எப்படி? – இது பார்த்தீவ் சொல்லும் கதை!

மும்பை: முகத்தில் குத்துவேன் என்று முன்பு மிரட்டியிருந்த ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன், பின்னர் தனக்கு நண்பராகி, வீட்டிற்கு அழைத்துச் சென்று சிக்கன் பிரியாணி சமைத்துக் கொடுத்தார் என்று சுவைபட தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல்.

கடந்த 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடந்த ஒருநாள் போட்டியின்போது, இந்தியாவின் இர்பான் பதான் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய ஹைடனைப் பார்த்து பார்த்தீவ் படேல் கிண்டல் செய்தார்.

இதனால் கோபமடைந்த ஹைடன், “இப்படியெல்லாம் கிண்டால் செய்தால், முகத்திலேயே குத்துவேன்” என்று மிரட்டியுள்ளார். பின்னர் பார்த்தீவ் மன்னிப்புக் கேட்க, அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

பின்னர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இருவரும் விளையாடியபோது நல்ல நண்பர்களாகி உள்ளனர்.

“பின்னாட்களில் நான் ஒருமுறை ஆஸ்திரேலியா சென்றிருந்தேன். அப்போது என்னை அவரின் வீட்டிற்கு அழைத்துச்சென்ற ஹைடன், எனக்கு சிக்கன் பிரியாணி சமைத்துக் கொடுத்தார்” என்று மகிழ்ச்சியுடன், மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் பார்த்தீவ்.