சிவகங்கை: ரஜினிகாந்த், முதலில் தமது கட்சியை பதிவு பண்ணட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து உள்ளார்.

சிவகங்கையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாநில அரசு விடும் டெண்டருக்கு ஆன் லைன் மூலமாக பணம் செலுத்திவிட முடியும். ஆனால் அதில் ஊழல் என்று ஆ. ராசா கூறுகிறார். 2 ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. வழக்கு முடிந்த பின்னர் ராசா எங்கே இருப்பார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

சிபிஐ உரிய ஆதாரத்தை சமர்ப்பிக்காத காரணத்தால் அவர் தப்பி உள்ளார். ராசா நிரபராதி என்று அறிவிக்கப்படவில்லை என்று கூறினார். ரஜினிகாந்தின் கட்சி அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும், பிறகு என்னிடம் கேளுங்கள், கட்சியை அவர் இன்னமும் பதிவு செய்யாத நிலையில் எதையும் சொல்ல முடியாது என்றார்.

ரஜினியின் அரசியல் கட்சி அறிவிப்புக்கு துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வரவேற்றுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,அது அவருடைய கருத்து என்றும், எல்லோரும் தங்கள் கருத்தை கூறலாம் என்றும் தெரிவித்தார்.