கோட்டா: ஒருகாலத்தில் சிறந்த தொழில் மையமாக திகழ்ந்து, பலரையும் தன்பால் ஈர்த்த ராஜஸ்தானின் கோட்டா நகரத்தினுடைய தொழில் வளாகம், தற்போது அனைத்து வாய்ப்புகளையும் இழந்து, வெறுமனே பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான பயிற்சி மையமாக திகழ்கிறது.

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வேலை வாய்ப்பின்மை சிக்கல் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் நிலையில், கோட்டாவிலும் அந்த கோபம் கொந்தளித்துக் கொண்டுள்ளது.

இந்த வளாகத்தில் இருந்த இன்ஸ்ட்ரூமென்டேஷன் லிமிடெட் என்ற மத்திய அரசு நிறுவனம், பல்வேறு துறைகளுக்கான சாதனங்களை தயாரித்து வந்தது. இந்நிறுவனம், கடந்த 2017ம் ஆண்டு சுத்தமாக மூடப்பட்டுவிட்டது. இதனால், பல நூற்றுக்கணக்கானோர் வே‍லையிழந்து போயினர்.

இதுதவிர, ஜே.கே. குழுமம், சாம்டெல் குழுமம், ஓரியண்டல் பவர் கேபிள்ஸ், ராஜஸ்தான் மெட்டல்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஒருகாலத்தில், இந்த கோட்டாவில் கோலோச்சி, அப்பகுதியையே பொருளாதார வளம் கொழிக்கும் பூமியாக வைத்திருந்தன.

ஆனால், ஒவ்வொரு நிறுவனமாக மூடப்பட மூடப்பட, எல்லாமே போய், அந்த தொழிற்பேட்டையே ஒரு பேய் உலவும் பூமியாக மாறிவிட்டது அப்பகுதி மக்களுக்கு. தற்போது, அந்த தொழில் வளாகம், வெறுமனே, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு பயிற்சி தருகின்ற இடமாக திகழ்கிறது.

– மதுரை மாயாண்டி