போதும் ஒரு அயோத்தி…  திரும்ப வரவேண்டாம்….

போதும் ஒரு அயோத்தி…  திரும்ப வரவேண்டாம்….

அயோத்தி குறித்த ஏழுமலை வெங்கடேசன் பதிவு

எப்படி, சண்டையில் கிழியாத சட்டை எங்கேயும் கிடைக்காதோ அதே போலத்தான், திருப்தி, அதிருப்தி என இருவித வெளிப்பாடுகள் கிடைக்காத நீதிமன்ற தீர்ப்பும்.

கிராமப்புற பஞ்சாயத்துக்களிலோ, குடும்பங்களின் சிக்கலான பிரச்சினைகளிலோ மத்தியஸ்தம் செய்து, தீர்வு சொல்ல வருபவரின்  நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு அவர் நல்ல மனிதர் என்பதை மதித்து, “அவரே சொல்லிட்டாரு. அதையே செய்வோம். இதற்கு மேல் பிரச்சினையைக் கட்டிக்கொண்டு ஏன் வீணாக அழ வேண்டும்” என்று இரு தரப்புமே சமாதானமாகப் போய் விடும்.

விட்டுக்கொடுத்தலும் கட்டுப்படுதலும் அங்கே மனிதர்களின் மனதில் பிரதானமாய் இருந்து கூட்டாட்சி செய்கின்றன.

ஆனால் சட்டம், கோர்ட்டு என்ற உலகிற்கு வந்து விட்டால் கடைசி வரை சட்ட அறிவை முடிந்த வரை திரட்டி மோதிப்பார்க்கும் சூழல் வந்து விடும். தீர்ப்பு என்றாலே வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு தரப்பு கொண்டாடுவதும், இன்னொரு தரப்பு எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற கடுமையாகக் கோபம் கொள்ளுவதும் தவிர்க்கவே முடியாத விசயம்.  சிறுசிறு வழக்குகளுக்கே இந்த கதியென்றால் பல தலைமுறைகளைத் தாண்டியும் சட்டப்படி ஓயாமல் இருந்த இந்த அயோத்தி வழக்கும் அதன் தீர்ப்பும் என்றால் சும்மா போய்விடுமா?

அதிலும் தேர்தல்கள் என்றாலே பாஜகவுக்கு பெரும் அஸ்திரங்களில் ஒன்றாகப் பயன்படும்  இந்த அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்குக் கோவில் கட்டுவது எனும் தீவிரமான விவகாரமான இது பற்றிச் சொல்ல வேண்டுமா.

பாபர் மசூதி இருக்கும் இடம், ராமர் கோவிலை ஆக்கிமிரத்து கட்டப்பட்டதுதான் என பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்டவைகள் வலிமையான குரலில் முழங்கி வந்தன. ராமாயணத்தின் நாயகனான ராமர், அயோத்தியில் தான் பிறந்தார் என்றும். அவர் பிறந்த இடம் வழிபாட்டுத்தலமாக இருந்ததாகவும் அதை இருத்தவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாகவும் இந்துத்துவா தரப்புகள் குற்றம்சாட்டி வந்தன.  அதே இடத்தில் மறுபடியும் ராமர் கோவிலைக் கட்டியே தீர வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நிலைப்பாடு.  மசூதி இருந்த இடம் இஸ்லாமியர்க்கே சொந்தம் என்பது எதிர்த் தரப்பு நிலைப்பாடு. யாரும் வளைந்து போக போகவே மாட்டார்கள் என்பது தான் களத்தின் யதார்த்த நிலவரம்.

இத்தகைய சூழலில்தான் 1992-ல் பாஜக தலைவர் அத்வானியின் ரதயாத்திரையைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி டிசம்பர் ஆறாம் தேதி கரசேவகர்களின் ‘’சேவை’’யில் இடித்துத் தகர்க்கப்பட்டது. அன்றைக்குப் பிடித்தது பிரச்சினைக்குள் கொழுந்துவிட்டெரியும் தீ.

அன்று முதல் டிசம்பர் ஆறாம் தேதி ஆண்டுதோறும் இந்தியாவின் அபாயகரமான நாளாகே மாறி விட்டது. முக்கிய இடங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு, எல்லா இடங்களில் உச்சக்கட்ட சோதனை என்பது ஒரு கட்டாய நடைமுறையாகவே மாற்றப்பட்டு விட்டது.

இவ்வளவு பரபரப்புகளும் சர்ச்சைகளும் சுழற்றி அடித்து வந்த அயோத்தி வழக்கு நீதிமன்றங்களில் பல கட்டங்களைத் தாண்டி, உச்சநீதிமன்றத்தை எட்டி ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வே விசாரித்து இன்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது.

 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை நிர்மோகி அகாரா, ராம் லல்லா விரஜ்மான், சன்னி வக்பு வாரியம் ஆகியவை சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று ஏற்கெனவே அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று இப்போது உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நிலத்திற்கு உரிமை கொண்டாடிய இந்த மூன்று அமைப்புகளின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

.

அடுத்தது நிலத்தின் எதிர்காலம் பற்றியது.  நிலம் யாருக்குச் சொந்தம் என்ற கேள்விக்கு அது இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது.  ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்பது இந்துக்களின் காலம் காலமான நம்பிக்கையை ஒதுக்கி விடமுடியாது.. எனவே அந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டலாம். அதற்காக மத்திய அரசு ஒரு அறக்கட்டளையை மூன்று மாதங்களுக்குள் உருவாக்கி உறுப்பினர்களை நியமித்து கோவில் கட்டுமான பணிகளைக் கண்காணிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.

இந்துக்கள் தரப்புக்கு இப்படியென்றால்,  இஸ்லாமியர் தரப்புக்கு?  அவர்களுக்கு மசூதி கட்டுவதற்காக அதே அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலத்தை அரசாங்கம் ஒதுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

சரி எதன் அடிப்படையில் இந்த தீர்ப்பு ?

பாபர் மசூதி, காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை என்பது தான் உச்சநீதிமன்ற தீர்ப்பில் ஓங்கிச்சொல்கிற விஷயம். மசூதிக்கு முன்பே அங்கே தூண்களுடன் கூடிய கட்டிடம் இருந்துள்ளது, ஆனால் அதைக் கோவில் என்றும் உறுதியாகச் சொல்லிட முடியாது என்ற தொல்லியல் துறை அகழ்வாய்வின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றம்.  அதே வேளையில் மசூதியை இடித்தது மாபெரும் குற்றம் என்று அந்த சம்பவத்தையும் தவறென்றே சொல்கிறது தீர்ப்பு.

இப்போது தீர்ப்புக்கு எதிரான முக்கியமான விமர்சனம், மசூதியை இடித்தது குற்றம் என்று சொல்லும் நீதிமன்றம், மசூதி இருந்த இடத்தை அலேக்காக தூக்கி இந்துக்களிடம் கொடுப்பது என்ன நியாயம்?

அயோத்தி விவகாரம் உண்மையிலே மிகவும் சிக்கலானது. சட்டங்களைக் கொண்டு பார்ப்பதை விட வரலாற்றையும் மனித உணர்வுகளையும் வைத்துத் தான் பார்க்க வேண்டும். இந்த தீர்ப்பை வைத்து வரிக்கு வரி விளையாடிக்கொண்டிருக்கலாம். ராமர் அயோத்தியில் பிறந்தார் என்று ஒரு தரப்பு சொன்னால், ராமரே ஒரு கற்பனையான பாத்திரம் தான் என்று எதிர்த்தரப்பு சொல்லும்.  இந்து வழிபாட்டுத்தலத்தில் மசூதி கட்டப்படவில்லை என்று சொன்னால், இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு முன் அனைத்து இடமே இந்துக்களின் வழிபாட்டுத்தலமாகத் தானே இருந்திருக்கும், ஆகையால் மசூதிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட தூண்களில், வழிபாட்டுச் சிற்பங்கள் இருந்தாலென்ன, இல்லாமல் போனால் தான் என்ன என்று கேள்வி வரும்.

வரலாற்றைப் பொறுத்தவரைப் பிழைகள் நடந்து கொண்டே இருக்கும். அது வலியத் திணிக்கப்பட்டதாகவும் இருக்கும், அல்லது அலட்சியத்தின் காரணமாகவும் இருக்கும். அதுவும் பல காரணங்களுக்காகவும் இருக்கும்.

தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு முன்னுதாரணமாக இருக்கவே செய்யும்.

இங்கேயே பாருங்கள். அன்னிய மதத்தினர் இங்கு வந்து வழிபாட்டுத்தலங்களை ஆக்கிரமித்துக் கட்டியிருந்தால், அவற்றை இடித்து விட்டால் அந்த இடம் இந்துக்களுக்குக் கிடைக்கும் என்ற முன் உதாரணத்தைச் சொல்கிறது என்று சொல்லலாம்.. இப்படியே போனால் என்ன நடக்கும்.  ஒவ்வொரு வரலாற்றுத் தவறுகளையும் சரிசெய்வோம் என்று ஆளாளுக்கு கிளம்புவார்கள்.  யோசித்துப் பாருங்கள் என்ன நடக்கும் என்று

சரி.  மசூதி இருந்த இடம் இஸ்லாமியருக்குச் சொந்தம் என்று தீர்ப்பு சொன்னால் என்ன நடக்கும். இந்த நாட்டுக்குப் படையெடுத்து வந்த அன்னிய மதத்தினரின் வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்பை நீதிமன்றம் அங்கீகரிக்கிறதா என்று கேட்பார்கள்.

ஒருவருக்குச் சொந்தமான இடத்தில் இன்னொருவன் வந்து வீடு கட்டிவிட்டால் வீட்டைக் கட்டியவனுக்கு அந்த இடம் சொந்தமாகி விடுமா என்று கேட்பார்கள். நீண்ட காலம் குடியிருந்தால் குடியிருப்பவனுக்கு நிலம் சொந்தம் என்ற வாதம், எதிர் வாதமாகவும் வரும்.

சரி அயோத்தி நிலம் இஸ்லாமியர்க்கும் கிடையாது இந்துக்களுக்கும் கிடையாது என்று அரசிடம் பொதுவாக ஒப்படைக்க வேண்டும். அங்கு எந்த மத வழிபாட்டுக்கும் வழிவகுக்காமல் அரசு மருத்துவமனையோ பல்கலைக்கழகத்தையோ கட்ட வேண்டும் என்று தீர்ப்பாகியிருந்தால்?

இன்னொரு தரப்பு என்ன நினைக்கும். ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட அன்னிய மதவழிபாட்டு இடங்கள் நமக்குக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களிடம் இல்லாமல் அரசிடம் பொதுச்சொத்தாகப் போகும்படி  வைப்பதற்கான வேலைகளைப் பார்ப்போம் என அதற்கான பயங்கர வழிமுறைகளில் இறங்க ஆரம்பித்தால்?

இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் தீர்ப்பால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் தரப்பை தூண்டிவிடும் கோஷ்டிகள். அவர்கள் வேலை இன்னும் சூப்பராக இருக்கும்.

அரசு தரும் ஐந்து ஏக்கர் மாற்று இடத்தில் மசூதி கட்டிக்கொண்டு போனால் நாம் அவர்களுக்குக் கட்டுப்பட்டதாக அர்த்தம் என்பார்கள். பாபர் மசூதிக்கு இழப்பீடு போலத் தரப்படும் அந்த அரசாங்க நிலத்தை வாங்கவே கூடாது, எங்களுக்கே தேவையே இல்லை என்று சொல்லி இஸ்லாமியர்கள் தங்களது கௌவரத்தை காட்டவேண்டும் என்றும் சொல்வார்கள். அதெல்லாம் தேவையில்லை, தொடர்ந்து அயோத்தி பாபர் மசூதி நிலத்தை மீட்கத் தொடர்ந்து போராடுவோம் என்ற நிலையை அறிவிக்கவேண்டும் என்ற அறிவுரை தருவார்கள்.

அதெல்லாம் போகட்டும் இப்போது அயோத்தி தீர்ப்பை எப்படித்தான் எடுத்துக்கொள்வது?  இன்றைய அயோத்தி தீர்ப்பைப் பொறுத்தவரை, நீண்ட காலமாய் பல்வேறு தரப்பினருக்கு ஏதோ ஒரு வகையில் அரசியல் பிழைப்பையும் மிரட்டுவதற்கு வசதியான கருவியாகவும், அடிக்கடி பதற்றத்தை உருவாக்கிக்கொண்டிருந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் அயோத்தி விவகாரம் சட்டப்படி முடிவுக்கு வந்திருக்கிறது. அதேபோல இரு தரப்பினர் மனங்களும் முடிவுக்கு வர வேண்டும்.

இது புரியாவிட்டால் கட்டுரையின் இரண்டாவது பாராவை மறுபடியும் படியுங்கள்

ஒரேயொரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். அயோத்தி பிரச்சினைக்குக் கிடைத்த தீர்வைத்தான் வருங்காலத்திலும் முன் உதாரணமாக நினைப்போம், எதிர்பார்ப்போம் என்று யாராவது நினைத்தால் அதைவிட மோசமான மனநிலை வேறெதுவும் இருக்கமுடியாது.

ஒரு அயோத்திதான். ஒரேயொரு அயோத்திதான்.  அதை விட்டுவிட்டு, எல்லாவற்றையும் அயோத்தியாகப் பார்க்கக்கூடாது. எல்லாவற்றிலும் அயோத்தியைப் பார்க்கக்கூடாது, தீர்ப்பைத் தந்திருக்கும் உச்சநீதிமன்றத்திற்கு சேர்த்துதான்.