ஒரு குழந்தை.. மூன்று பெற்றோர்!: சினிமாவை மிஞ்சும் சென்னை சம்பவம்!

ரு குழந்தைக்கு இரு பெற்றோர் போட்டிபோட்டு சொந்தம் கொண்டாடுவதை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம்.. ஏன், நிஜத்திலும் சில சம்பங்கள் அப்படி நடந்து நம்மை அதிரவைத்திருக்கின்றன.

ஆனால் சென்னையில் ஒரு குழந்தைக்கு மூன்று பெற்றோர்.. மூவரும் பாசத்தைப் பொழிந்திருக்கிறார்கள்.

சிறுவனாக வளரந்த அந்த குழந்தைக்கு 14 வயதில் நினைவுகள் தப்பிப்போய் வாழ்க்கை திசைமாற.. மீண்டும் தனது பெற்றோரை தேடிக்கண்டுபிடித்திருக்கிறார்.

சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் சென்னையில்தான் நடந்திருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் நமத்தோடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 56 வயது ராமச்சந்திரன். பிழைப்புக்காக சென்னை வந்தவர், இங்கு  பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலப்பாக்கம் ஒட்டியம்பாக்கம் சாலையில் மனைவியுடன் வசித்து வந்தார்.

இவருக்கு குழந்தை பாக்யம் இல்லாத நிலையில், திருவண்ணாமலையில் வசித்த தனது தம்பி விசுவநாதனின் மகன் சதாசிவத்தை குழந்தையாக இருக்கும்போதே தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்து வளர்த்து வந்தார்.

2008-ம் ஆண்டு.. சதாசிவம் வளர்ந்து ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார். அந்த வருடம் ஆகஸ்டு மாதம் 13-ம் தேதி.. வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற சதாசிவம் வீடு திரும்பவில்லை.

பதறிப்போனார் வளர்ப்புத்தந்தை ராமச்சந்திரன். எங்கெங்கோ தேடினார். சதாசிவத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.  சில நாட்களில் சதாசிவத்தின் தந்தையான, தனது தம்பி விசுவநாதனிடம் கூறினார். அவரும் தேடாத இடமில்லை. ஆனாலும் பயனில்லை. காவல்துறையில் புகார் கொடுத்தனர். ஆனாலும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலை.

ஒரு கட்டத்தில் மனம் வெறுத்துப்போய் தேடுவதை கைவிட்டனர்.

சிறுவன் சதாசிவம் என்ன ஆனார்?

சதாசிவம் பெற்றோருடன்

வழக்கம்போல் அன்று பள்ளி சென்ற சதாசிவத்துக்கு, தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் மறந்து போய்விட்டது. இதனால் பெற்றோர், வீடு குறித்த நினைவு இன்றி எங்கெங்கோ அலைந்து திரிந்திருக்கிறார்.

நல்லுள்ளம் கொண்ட எவரோ, சதாசிவத்தின் நிலை அறிந்து வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்.

அங்கு இரண்டு வருடங்கள் இருந்த சதாசிவம் பிறகு, விழுப்புரத்தில் உள்ள அந்த தனியார் இல்லத்தின் கிளைக்கு அனுப்பப்பட்டார்.

பழைய நினைவுகள்தான் மறந்துபோய்விட்டதே ஒழிய, இயல்பான மனிதராகவே சதாசிவம் இருந்தார். ஆகவே விழுப்புரத்திலேயே  தனியார் சோப் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்க்கப்பட்டார்.

அப்போது அங்கு லோடு ஏற்றி வந்த தண்டையார்பேட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோவிந்தசாமி, சிறுவனஅ சதாசிவத்தைப் பார்த்திருக்கிறார். அவருக்கு(ம்) குழந்தை இல்லை.

 

சதாசிவத்துக்கு அடைக்கலம் கொடுத்த காப்பகத்தை அனுப்பி சிறுவனை தான் வளர்ப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களும் ஒப்புக்கொள்ள, தன்னுடன் சதாசிவத்தை சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்து வந்தார். அங்கு அவரும் அவரது மனைவியும் சொந்த பெற்றோர் போலவே சதாசிவத்தின் மீது அன்பைப் பொழிந்தனர்.

அங்கு வளர்ந்த சதாசிவம் இளைஞராகிறார். தனது புதிய வளர்ப்புத் தந்தையான கோவிந்தசாமி போலவே, ஓட்டுனராகி, சொந்தமாக வாடகை கார் ஓட்ட ஆரம்பிக்கிறார்.

இந்த நிலையில் சதாசிவத்துக்கு  திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் நண்பராகிறார். ஒருமுறை சதாசிவம், தனது நண்பர் லோகேஷிடம்,  தனக்கு தலையில் அடிபட்டதால் பெற்றோர் பற்றி நினைவு வரவில்லை. அவர்களைப் பார்க்க வேண்டும்போல் இருக்கிறது என கூறியிருக்கிறார்.

வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்தில் தான் இருந்தது மட்டுமே தனக்கு நினைவில் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

 

உடனே லோகேஷும், சதாசிவமும் அந்த இல்லத்துக்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள். அந்த காப்பத்தினர், சதாசிவம் குறித்து தங்களிடம்  ஆவணங்களை தேடி எடுத்திருக்கிறார்கள். அதில் பல வருடங்களுக்கு முன் சதாசிவத்துக்காக வங்கியில் கணக்கு தொடங்கிய ஆவணம் இருந்துள்ளது. அதில் சதாசிவம் படித்த பள்ளியின் அடையாள அட்டை நகல் இருந்திருக்கிறது.

அடையாள அட்டையில் சதாசிவத்தின் தந்தை பெயர் ராமச்சந்திரன் என்பதும், சித்தாலப்பாக்கம் விலாசமும் இருந்தன.

அங்கு சென்று நேரடியாக விசாரிக்கலாமா என ஆலோசித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறை மூலமே செல்லலாம் என்று முடிவெடுத்து சதாசிவமும், லோகேஷும் பள்ளிக்கரணை காவல் நிலையம் சென்று  விபரத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

 

இவர்கள் சொன்னதைக் கேட்ட காவலர்களுக்கு, “சினிமாவை விஞ்சும் சம்பவமாக இருக்கிறதே” என்ற ஆச்சரியம்.

பள்ளிக்கரணை காவல் நிலைய ஆய்வாளர்  ஆல்பின்ராஜ்  உடனிடியாக பழைய காவல்துறை ஆவணங்களைச் சோதித்தார். அதில் 2008-ம் ஆண்டு சதாசிவம் காணாமல் போனதும், அதுகுறித்து தந்தை ராமச்சந்திரன் புகார் அளித்திருந்த நகலும் கிடைத்தன. .

அதில் இருந்த முகவரியை வைத்து சித்தாலப்பாக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த ரமச்சந்திரனிடம் விபரத்தைக் கூறினர். அவரும், “எனது தம்பி மகன்தான் சதாசிவம். நான்தான் வளர்த்தேன். 2008-ம் வருடத்தில் இருந்து அவனை காணவில்லை..” என்று கதறியிருக்கிறார்.

அவரை பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த காவலர்கள், சதாசிவம் முன் நிறுத்தியிருக்கிறார்கள்.

14 வயதில் சிறுவனாக காணாமல் போன சதாசிவம் வளர்ந்து ஆளாகி 24 வயது இளைஞனாக நிற்பதைக் கண்ட ராமச்சந்திரன் உணர்ச்சிப் பெருக்கில் கட்டியணைத்து கதறிவிட்டார்.

அதோடு சதாசிவத்தின் தந்தையும் தனது தம்பியுமான விசுவநாதனுக்கு உடனே தகவல் கூறினார். திருவண்ணாமலையிலிருந்து விஸ்வநாதன், தனது மனைவி அன்னலட்சுமியும் காவல் நிலையம் வந்தனர். அவர்களுக்கும் காணாமல் போன மகனை இத்தனை ஆண்டுகள் கழித்து சந்தித்ததும் உணர்ச்சிப் பெருக்கு..!

 

உதவிய காவல்துறையினருக்கு நன்றி சொல்லி கிளம்பினார் சதாசிவம். மேலும், “என்னைப் பெற்ற தாய் தந்தை… பிறகு வளர்த்த பெரியப்பா  பெரியம்மா.. பிறகு வளர்த்த கோவிந்தராஜ் தம்பதி என மூன்று பெற்றோர்கள் எனக்கு. மூவரையும் மறக்கமாட்டேன்” என்றார் நெகிழ்வுடன்.