புனே:

புனே இன்போஸில் அலுவலகத்தல்  கொலை செய்யப்பட்ட பெண் ஊழியர் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்கவும்,  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கவும் இன்போசிஸ் நிறுவனம் முன் வந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ரஸிலா (வயது 23). கோவையில் பொறியியல் பட்டபடிப்பு படித்த இவர், புனேயில்  உள்ள  இன்போசிஸ் நிறுவன கிளையில்  பணியாற்றி வந்தார்.

சென்னையில் இரு ஆண்டுகள் பணியாற்றிய ரஸிலா, புனே இன்போசிஸ் அலுவலகத்தில் இரு மாதத்துக்கு முன்பு தான் சேர்ந்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஸிலாவை அங்கு பணியாற்றும் இரவு காவலர் பாபென் சாகியா என்பவர் கழுத்தைநெறித்து கொலை செய்துவிட்டார்.  அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட ரஸிலாவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இன்போசிஸ் நிறுவனம் அவரின் குடும்பத்துக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு தர முன் வந்துள்ளது.

இது குறித்து இன்போசிஸ் மனிதவளத்துறையின் பிரதிநிதி சந்தோஷ்நாயக் விடுத்துள்ள அறிக்கையில், “ புனே இன்போசிஸ் ஊழியர் ரஸிலாவின் மறைவுக்கு நாங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்

அவரின் இழப்பு அவரின் குடும்பத்தினருக்கு ஈடுகட்ட முடியாது.இருப்பினும், இன்போசிஸ் நிறுவனம் சார்பில் ரஸிலா குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு தர உள்ளோம்.மேலும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் அளிக்கப்படும்” என்று  தெரிவி்த்துள்ளார்.