26 –வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை மே.வங்க மாநில முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தொடங்கி வைத்தார்.

கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம், விழாவை தொடங்கி வைத்த மம்தா, “மே.வங்க மாநிலத்தில் 100 சதவீத இருக்கைகளுடன் திரை அரங்குகள் செயல்படலாம்” என அறிவித்தார்.

“திரை அரங்கு உரிமையாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை ஒழுங்காக கடை பிடிக்க வேண்டும்” என அவர் கேட்டுகொண்டார்.

“உலகத்திறன் வாய்ந்த கலைஞர்கள் மே.வங்க சினிமாவில் உள்ளனர்” என குறிப்பிட்ட மம்தா பானர்ஜி “ஹாலிவுட் மற்றும் இந்தி சினிமா உலகை ஒருநாள் மே.வங்காள திரை உலகம் முறியடித்து முதல் இடத்துக்கு வரும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

மே.வங்க மாநில தூதரான நடிகர் ஷாரூக்கான், மும்பையில் இருந்தபடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கடந்த 10 ஆண்டுகளாக கொல்கத்தா திரைப்பட விழாவில் தவறாது கலந்து கொள்ளும் ஷாரூக்கான், கொரோனா காரணமாக இந்த முறை விழாவில் நேரில் பங்கேற்க வில்லை.

45 நாடுகள் கலந்து கொண்டுள்ள இந்த விழாவில் 131 சினிமாக்கள் திரையிடப்படுகின்றன.

சத்யஜித்ரேயின் “அபூர் சன்சார்” படத்துடன் ஆரம்பித்த திரைப்பட விழா, 13 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

– பா. பாரதி