பல்வேறு சாதனைகளை கோலியிடம் அடித்துக் கொண்டுவந்து சேர்த்த அந்த ஒரு இரட்டை சத அலை..!

புனே: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கோலி அடித்ததோ ஒரு இரட்டை சதம்தான். ஆனால், அதன்மூலமாக அவர் படைத்த சாதனைகளோ பல.

இந்திய இன்னிங்ஸில் மொத்தமாக 254 ரன்களை அடித்த விராத் கோலி, கடைசிவரை நாட் அவுட்டாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலியின் சாதனைகள்

* ஒரே பந்தில் இரட்டை சதம் மற்றும் 7000 ரன்கள் என்ற இரண்டு மைல்கற்களை எட்டினார்.

* மொத்தமாக 7 இரட்டை சதங்கள் அடித்து அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் சச்சின் மற்றும் சேவாக் சாதனைகளை விஞ்சினார்.

* டெஸ்ட்டில் 7000 ரன்களைக் கடந்த ஏழாவது இந்திய வீரர் ஆனார்.

* இது கோலியின் 26வது டெஸ்ட் சதமாகும். இதன்மூலம் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை சமன்செய்துள்ளார்.

* டெஸ்ட் அணியின் கேப்டனாக கோலி அடிக்கும் 19வது சதமாகும் இது. இதன்மூலம் கேப்டனாக அதிக டெஸ்ட் சதமடித்தவர்கள் என்பதில், இரண்டாம் இடத்தை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கிப் பாண்டிங்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த விஷயத்தில், தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அச்சாதனையையும் கோலி விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

*‍ மொத்தம் 138 இன்னிங்ஸ்களில் 26 சதங்கள் அடித்ததன் மூலம், குறைந்த இன்னிங்ஸ்களில் அந்தச் சாதனையை செய்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். அச்சாதனையை வெறும் 69 இன்னிங்ஸ்களில் செய்த ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

* உலகளவில் அதிக இரட்டை சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் 4ம் இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. டான் பிராட்மேன் 12 இரட்டை சதங்களுடன் முதலிடத்திலும், சங்ககாரா 11 இரட்டை சதங்களுடன் இரண்டாமிடத்திலும், பிரையன் லாரா 9 இரட்டை சதங்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். மகிளா ஜெயவர்த்தனே மற்றும் வாலி ஹாமொன்ட் ஆகியோருடன் நான்காமிடத்தில் இருக்கிறார் கோலி.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-