டில்லி:

டில்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்தியா&கொரியா மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கலந்துகொண்டார். இதில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ நாடு முழுவதும் பரந்த வேறுபாடுகள் இருப்பதால் ஒரே சீரான ஜிஎஸ்டி.யை கொண்டு வருவது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை. இதற்காக தற்போதை நிலையில் பணியாற்ற முடியாது. எனினும் வரி தர மேம்பாடு மேற்கொள்ளப்படும் என்று முதலீட்டாளர்கள் உறுதியாக நம்பலாம்.

அடுத்த கட்டமாக வரி இணங்கள் இணைப்பு மேற்கொள்ளப்படும். இந்த நிலையை அடைந்தவுடன் மறுசீரமைப்பு தொடங்கும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் நீண்ட நாட்களாக இரு தர நிர்ணய விலை அமலில் உள்ளது. இதை ஒன்றாக இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு சில காலமாகும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்தியா போன்ற நாடுகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகை குறிப்பிட்ட அளவில் இருப்பதால் ஒரே விலை அமல்படுத்துவது கடினம். பல தரப்பட்ட விலை இருப்பதால் 17 வகையான வரி விதிப்புகள், 23 செஸ் இருந்தன. இவை அனைத்தும் ஜிஎஸ்டி.யுடன் இணைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் சில வாடிக்கையாளர்களிடம் கடனை திரும்ப பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு சிறிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது’’ என்றார்.