பெங்களூரு

ன்னும் மூன்று வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் பேர் வரை ஐடி நிறுவனங்களில்  வேலை இழப்பார்கள் என தி ஹெட் ஹண்டர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கூறுகிறார்.

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட அகில இந்திய நிறுவனம் தி ஹெட் ஹண்டர்ஸ்.  இந்நிறுவனம் ஒரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஆகும்.  இந்தியாவின் பல நகரங்களிலும் கிளைகளைக் கொண்ட இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிரிஷ் லட்சுமிகாந்த் சமீபத்தில் தெரிவித்ததாவது :

”கடந்த வார இறுதியில் நான் புனே நகருக்கு சென்றிருந்தேன்.  அங்கு ஒரு ஐடி ஊழியர் தற்கொலை செய்துக் கொண்டதையும், மற்றும் பல ஐடி ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதையும் அறிந்துக் கொண்டேன்.

சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் முதுநிலை மேலாளராக பணி புரியும் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரது தற்போதைய சம்பளம் ரூ.35 லட்சம்.  அவர் என்னிடம் தனக்கு ஒரு வேலை பார்த்து தரும்படி கூறினார். தற்போதைய நிறுவனத்தில் அவருக்கு கீழ் பணி புரிந்தவர்களில் 25%க்கும் மேலானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கும் அதே நிலை விரைவில் வரக்கூடும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

நான் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதால் இது போல பல சந்திப்புகள் நிகழ்கின்றன.  தற்போது புதிய வேலைவாய்ய்ப்பை தேடுபவர்களை விட வேலை இழந்தவர்கள் வேலை வாய்ப்பு தேடுவதே அதிகம் உள்ளது.  என்னிடம் அதுபோல அணுகுபவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட ஐந்து மடங்காக உயர்ந்து விட்டது.  பணியில் இருக்கும் போதே பணி தேடுபவர்களும், எந்த நேரத்திலும் தான் பணி நீக்கம் செய்யப்படுவோம் என்னும் அச்சத்தில் உள்ளதாகவே கூறுகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்கள், அதாவது ஐடி/ பிபிஓ/ டெலிகாம் போன்ற பல நிறுவனங்கள் தங்களின் வியாபாரம் குறைவதால் வேறு வழியின்றி வேலை நீக்கம் செய்வதாக குறிப்பிடுகிறார்கள்.  ஐடி கம்பெனிகளில் மட்டும் இன்னும் மூன்று வருடங்களில், வருடத்துக்கு ஒன்றிலிருந்து இரண்டு லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என தெரிகிறது.

உலகம் முழுதும் ஆராய்ந்தால்,  இந்தியாவில் மட்டும் 60% வேலைவாய்ப்புகள் குறையும் அபாயம் இருக்கிறது.  அவ்வளவு ஏன் இந்தியாவில் விரைவில் ஓட்டுனர் இல்லாத வாகனங்களும், ரோபோட்டுகள் சமையல் செய்யும் ஓட்டல்களும் கூட வந்துவிடும் என தோன்றுகிறது.

சமீபத்தில் நான் ஒரு சிறு தொழிலதிபரை சந்தித்தேன்.  அவர் ஐஐடியில் பொறியியல் படிப்பு முடித்தவர்.  ஐஐஎம்ஏ வில் எம் பி ஏ மேற்படிப்பு படித்தவர். 33 வயது இளைஞர்.  அவர் நிறுவனம் தற்போது வியாபாரம் இல்லாததால் அடியோடு முடக்கப்பட்டுள்ளது.  அவர் தனக்கு ஏதும் வேலைவாய்ப்பு உண்டா என கேட்பதற்கே என்னை சந்தித்தார்.   கடந்த எட்டு மாதங்களாக அவர் தனது மனைவியின் வருமானத்தில் வாழ்வதாக தெரிவித்தார்.

இப்படி அனைத்து மட்டங்களிலும் வேலை இல்லாமை பரவி வருகிறது.  நேற்று ஒரு கூட்டத்தில் எலோன் மஸ்க் என்பவர் கூடிய விரைவில் எங்கும் ரோபோட்டுகள் வந்து விடும் எனவும் அவற்றை இப்போதிலிருந்தே கட்டுக்குள் வைக்காவிட்டால் அது மனித இனத்துக்கே அபாயம் எனவும் எச்சரித்தார்.

மேலே குறிப்பிட்டுள்ள அத்தனையுமே எச்சரிக்கை தான்.  எங்குமே புத்திசாலிகளுக்கு வரவேற்பு உண்டு.  நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதே இதை முறியடிக்க சரியான வழி.  மேற்கத்திய நாடுகள் நமது ஊழியர்களை விரும்புவதே நம் மக்களின் அறிவுக் கூர்மையால் தான்.  அதை மேலும் வளர்த்து உங்கள் திறமையை காட்டினால் எங்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்” எனக் கூறுகிறார்.