நியுஜிலாந்து மசூதி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்தவர் படுகாயம்

கிறிஸ்ட்சர்ச், நியுஜிலாந்து

நேற்று நியுஜிலாந்த் மசூதியில் நடந்த துப்பாக்கி தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நேற்று நியுஜிலாந்த்தில் கிறிஸ்ட் சர்ச் பகுதி மசூதிகளில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த துப்பாக்கி சூட்டில் இருந்து வங்க தேச கிரிக்கெட் அணி வீரர்கள் அதிருஷ்டவசமாக தப்பினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயம் அடைந்தவர்களில் ஒருவரான அகமது இக்பால் ஜகாங்கிர் என்பவர் ஐதராபாத்தை சேர்ந்தவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர் நியுஜிலாந்து சென்று கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள உணவு விடுதியில் பணி புரிந்து வருகிறார். இவருடைய பெற்றோர்கள் ஐதராபாத் நகரில் அம்பர்பேட் பகுதியில் வசித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜகாங்கிருக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த சரியான தகவல் இன்னும் வரவில்லை. ஐதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதின் ஓவைசி ஜகாங்கிர் குடும்பத்தினரை நியுஜிலாந்துக்கு அனுப்ப உதவுமாறு தெலுங்கானா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நியுஜிலாந்து நாட்டில் உள்ள இந்திய தூதர் சஞ்சீவ் கோஹ்லி, “தற்போது கிடைத்து வரும் தகவல்களின்படி இந்த துப்பாக்கி சூடு நிகழ்வுகளில் இந்தியாவை சேர்ந்த 9 பேர் காணாமல் போய் உள்ளனர். அதிகார பூர்வமான தகவல்கள் இன்னும் வரவில்லை. இது மனிதத்தன்மைக்கு எதிரான மாபெரும் தாக்குதல் ஆகும். பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு எங்கள் ஆறுதலை தெரிவிக்கிறோம்” என அறிவித்துள்ளர்.