இந்தியாவில் காற்று மாசுவினால் 8ல் ஒருவர் உயிரிழப்பு – ஆய்வில் தகவல்

இந்தியாவில் 8ல் ஒரு நபர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது புகைப்பிடிப்பதால் ஏற்படும் உயிரிழப்பை காட்டிலும் அதிகம் என ஆய்வு தெரிவித்துல்ளது.

காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டு வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லப்போனால் டெல்லி அதிகளவில் காற்று மாசுபாடு அடைந்துள்ளது. இதன் காராணமாக சமீபத்தில் தீபாவளிக்கு பட்டாசுக்கள் வெடிக்கவும் நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இருப்பினும் காற்றின் மாசு அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

delhi

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இது புகைப்பிடிப்பதை காட்டிலும் ஏற்படும் உயிரிழப்பு அதிகமாகும். காற்று மாசுவினால் இந்தியாவில் வாழும் மக்களிடம் சராசரி வாழ்க்கையானது குறைந்துள்ளது. இதனால் ஏராளமானோர் உயிர் இழப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் அவை ஏற்படுத்துகின்றன.

இந்தியாவில் 77 சதவிகித மக்கள் மோசமான நிலையில் மாசடைந்த காற்றை சுவாசிக்கின்றனர். கடந்த ஆண்டில் காற்று மாசுபாட்டால் 12லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் வீட்டிற்குள் ஏற்பட்ட காற்று மாசுவினால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி 5 வயதுக்குட்பட்ட 26 சதவீத குழந்தைகள் காற்று மாசுவினால் மரணம் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். கடந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகள் இதனால் இறந்துள்ளன.

இதேபோல் 70 வயதுக்குள் மரணம் அடைபவர்களில் பாதிபேர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லப்போனால், பீகார், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், ஜார்கண்ட், டெல்லி, அரியான, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அதிகளவில் காற்று மாசுபாட்டினால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.