ராமேஸ்வரம் : பாம்பன் பால இரும்புக் கயிறு அறுந்து ஒருவர் காயம்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் பாலத்தில் இரும்பு கம்பியால் ஆன கயிறு அறுந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

ராமேஸ்வரம் தீவுக்குள் செல்ல அமைக்கப்பட்டுள்ள பாம்பன் பாலம் மிகவும் பழமையானது. இந்த பாலம் ரெயில்கள் செல்லும் போது மூடி வைப்பதும் கப்பல்கள் செல்லும் போது திறந்து வைப்பதும் வழக்கம் ஆகும். இந்தப் பாலம் இரும்பினால் செய்யப்பட்டது.

இந்த பாலத்தை பல இரும்புக் கம்பிகளால் ஆன கயிறுகள் தாங்கிக் கொண்டு உள்ளன. இதில் ஒரு இரும்புக் கம்பிக் கயிறு திடீரென அறுந்துவிழுந்தது. அப்போது அங்கு பணி புரிந்துக் கொண்டிருந்த சேசு என்னும் ஒப்பந்த தொழிலாளி மீது அந்த இரும்பு விழுந்ததால் அவர் காயமடைந்துள்ளார்.

தற்போது சேசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அளித்த அரசு அதிகாரி இந்த பாலத்தை செப்பனிட சென்னையில் இருந்து தொழில்நுட்ப நிபுணர்கள் வர உள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்துக்கு பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதால் கப்பல் போக்குவரத்து தடை படும் எனவும் தெரிவித்துள்ளார்.