கொழும்பு:

லங்கையில்  ஈஸ்டர் அன்று நடைபெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பை தொடர்ந்து, பல இடங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் வீடுகள், நிறுவனங்கள், கடைகள் தாக்கப்பட்டும், எரிக்கப்பட்டும் வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற கலவரத்தில் ஒருவர் பலியான தகவல் வெளியாகி உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கலவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கை ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பின்போது 253 பேர் பலியான நிலையில், அங்கு இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. சிங்கள இளைஞர் களும், புத்த பிட்சுகளும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.

இதன் காரணமாக  தென்னிலங்கை பல பகுதிகள் வன்முறைக்களமாக மாறி வருகின்றன. இதன் காரணமாக அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பு தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

‘தென் இலங்கையில், குறிப்பாக குருணாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களின் உடமைகள், கடைகள் சிங்கள இளைஞர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன. அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து சிங்கள வெறியர்கள் அவர்களின் உடமைகளையும், குரான் போன்ற ஆன்மிக நூல்களையும் தீயிட்டு வருகின்றனர்.கொண்டிருப்பதான காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்வேறு பகுதிகளில் அப்பாவி முஸ்லீம் வீடுகள் மற்றும் அரபுக் கல்லூரி எரிக்கப்பட்டு உள்ளது.

ஹெட்டிபொ , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. புத்தளம் பகுதியில் நடைபெற்ற இருதரப்பினருக்கு இடையேயான கலவரத்தில்  ஆடவர் ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் மீண்டும் சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு உள்ளது. மேலும்,  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்  எழுவதைத் தடுக்க, இலங்கையில் இரவுநேர ஊரடங்கு நடப்பில் உள்ளது. கலவரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ராணுவமும் கலவரத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து இலங்கை  பாதுகாப்பு சபை அமைச்சர் அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்த்தன விடுத்துள்ள எச்சரிக்கையில், நாட்டில் தற்போது அவசர நிலைமை அமல்படுத்தப்பட்டு இருப்பதால், பொதுமக்கள்  அமைதியாக  இருக்குமாறு இலங்கை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சகத்தினால் வழங்கப்படும்  தகவல்களை மட்டும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி குறுந்தகவல்கள் குறித்து அச்சப்பட வேண்டாம் என அவர் கேட்டுள்ளார்.

பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரின் செயற்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் அவர் கேட்டுள்ளார்.

வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவ தளபதியும் வன்முறையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.