தருமபுரி மாணவி வன்கொடுமை – கொலை வழக்கில் ஒருவர் கைது

ருமபுரி மாவட்டத்தில் பலாத்கார முயற்சியில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரில் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கோட்டப்பட்டி அடுத்த சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அண்ணாமலை – மலர் தம்பதி. இவர்களது மகள் சவுமியா (வயது 16). இவர்,  பாப்பிரெட்டிபட்டியில் தங்கி அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த சவுமியா கடந்த 5-ம் தேதி  இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகேயுள்ள மறைவான பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களான  சதீஷ், ரமேஷ் ஆகிய 2 இளைஞர்களும் சவுமியாவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பிறகு  அவரைப் பலவந்தமாக ஆற்றோடைப் பகுதிக்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

இதற்கிடையில் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் தெரிந்ததால் இருவரும் மாணவியை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.  மயங்கிக் கிடந்த மாணவியை கிராம மக்கள் மீட்டு வீட்டில் சேர்த்துள்ளனர். வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிய பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும், அவர்களைத் தேடி வருவதாகவும் கூறி வந்தனர். .

இந்நிலையில், இந்தச் சம்பவத்தால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி மரணமடைந்தார்.

இந்த நிலையில் மாணவி மரணத்துக்கு  காரணமானவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஊர்மக்கள் சிட்லிங் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து மறியலில் ஈடுபட்டவர்களைச் சமாதானப்படுத்தினர்.

இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவரான சதீஷை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரமேஷை தேடி வருகின்றனர்.