Random image

சேலம் – சென்னை வழித்தடத்தில் மேலும் ஒரு விமானம் இயக்க முடிவு

சென்னை:

சென்னை சேலம் இடையே சிறிய ரக விமான சேவை கடந்த மார்ச் மாதம் 25ந்தேதி தொடங்கப்பட்டது. தற்போது மேலும் ஒரு விமானம்  அடுத்த மாதம் 28-ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை 2017ம் ஆண்டு  ஏப்ரல் 27ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் வடிவமைத்துள்ள இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து  மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் ட்ரூ ஜெட் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி தனது சேவையை தொடங்கியது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் இந்த விமானமானது காலை 10.30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைந்து பின்னர் சேலத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு 11.45 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

தற்போது பெரும்பாலோர் விமான சேவையை விரும்புவதால், மாலை நேரத்திலும் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதே வழித்தடத்தில் மேலும் ஒரு விமான வழி சேவை தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காலை விமான  சேவையினை வழங்கி வரும் ட்ரூ ஜெட் விமான நிறுவனமே மாலை நேரத்திலும் தனது சேவையை விரிவுபடுத்துகிறது.

இதன்படி அடுத்த மாதம் (அக்டோபர்)  28-ஆம் தேதி முதல் ட்ரூ ஜெட் நிறுவனம், சென்னை – சேலம் இடையே மாலை நேர விமான சேவையை தொடங்க உள்ளது.