தமிழகத்தை மிரட்டும் புதிய புயல் சின்னம் பெய்ட்டி!

சென்னை

புதியதாக வங்க கடலில், ‘பெய்ட்டி’ என, பெயரிடப்பட உள்ள  புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. வரும், 13ம் தேதி, தமிழக கடற்பகுதியை நெருங்கி, சென்னை – கல்பாக்கம் இடையே, இந்தப் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  ஏற்கனவே அடித்த ‘கஜா’ புயலின் பாதிப்பும், சோகமும் தீராத நிலையில், அடுத்த புயல் தமிழகத்தை மிரட்டத் துவங்கியுள்ளது.

வட கிழக்கு பருவ மழை துவங்கியது முதல், திடீர் கன மழையும், புயலும் அடுத்தடுத்து தமிழகத்தை மிரட்டி வருகின்றன. ‘கஜா’ புயல் நவம்பர், 16ல், நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கரையை கடந்ததால், டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்தும், பல கிராமங்களுக்கு, இன்னும் மின் வினியோகம் துவங்கவில்லை.

தற்சமயம், தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் மிரட்டி வருகிறது.  அடித்து ஓய்ந்த கஜா புயலுக்கு பின், நவம்பர் இறுதியில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும், டிச., 4ல், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, மழையை கொட்டின.  அதன் பிறகு டிச., 6 முதல், மழை குறைந்து, வறண்ட வானிலை நிலவுவதால் பகலில் வெயிலும், மாலை முதல் முற்பகல் வரை பனியும் நிலவுகிறது.

வங்கக்கடல் பகுதியில் கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கே, நில நடுக்கோட்டு பகுதிக்கு வடக்கில், தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த பகுதி, நாளை முதல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், அந்தமானுக்கு அருகில் வரும் போது, புயல் சின்னமாக மாறும். பின், புயலாக உருவெடுக்கும் என, கூறப்படுகிறது., தாய்லாந்து நாடு இந்தப் புயலுக்கு, ‘பெய்ட்டி’ என்ற, பெயர் சூட்ட உள்ளது.

தற்போதுள்ள நிலவரப்படி இப்புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும், 13ம் தேதி நள்ளிரவு முதல், தமிழக கடற்பகுதியை நெருங்கும் எனவும். டிச., 15 முதல், 16ம் தேதிக்குள், நெல்லுார் – நாகை இடையில் கரையை கடக்கலாம் எனவும்  எதிர்பார்க்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, இந்த புயல், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு  இடையே, கல்பாக்கம் அருகே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

பெய்ட்டி புயல் உருவான பின், காற்றின் வேகம், திசை மாறுபாடு, நிலப்பகுதியில் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை பொறுத்து, கரையை கடக்கும் இடமும், நாளும் மாறலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். புதிய புயலால், கடலுார், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிக தாக்கம் ஏற்படவும். ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.