ஓட்டலில் அரிவாளை நீட்டி மிரட்டிய இன்னொரு தி.மு.க. பிரமுகர்!

சென்னையில் நடந்தது போலவே  ஓட்டல் ஊழியரை தி.மு.க. பிரமுகர் தாக்கிய சம்பவம், கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே  உள்ளது மருங்கூர். இங்குள்ள ஒரு ஓட்டலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் சாப்பிட வந்தார். பரோட்டா சாப்பிட்டு முடித்த அவரிடம்  பில் தரப்பட்டது.

ஆனால் பணம் தராமல், அந்த இளைஞர் தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து காண்பித்து ஊழியர்களை மிரட்டினார். மேலும் ஓட்டலில் இருந்த பொருட்களையும் அரிவாளால் சேதப்படுத்தினார். இவரது அதிரடி நடவடிக்கையால் பயந்து போன வாடிக்கையாளர்கள் ஓட்டலை விட்டு அலறியடித்து ஓடினர். பிறகு அந்த இளைஞர் தப்பிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து ஓட்டலில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில்  அரிவாளால் ஊழியர்களை வெட்ட முயன்றவர் அதே பகுதியைச் சேர்ந்த சுதா அமர்சிங் என்பதும் அவர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

சுதா அமர்சிங் தி.மு.க. பிரமுகராவார்.  கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகில் உள்ள ஆத்தியடி பகுதியைச் சேர்ந்தவர். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர்களில் ஒருவராக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர்.

இதையடுத்து வழக்கறிஞர் சுதா அமர்சிங் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.

இதே போல சென்னை ஓட்டல் ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்குதலில் ஈடுபட்ட தி.மு.க. பிரமுகர் யுவராஜ் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்டவரை தி.மு.க.வின் அப்போதைய செயல் தலைவரும் தற்போதைய தலைவருமான மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

இந்த நிலையில் அதே போன்று ஓட்டலில் தி.மு.க. பிரமுகர் தாக்கிய சம்பவம் மீண்டும் நடந்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.