சென்னைக்கு மேலும் ஒரு மெட்ரோ! சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

--

சென்னை,

சென்னையில் மேலும் ஒரு மெட்ரோ ரெயில் சேவை வழித்தடம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், முதல்வர் பழனிசாமி இன்று அறிக்கை ஒன்றைப் படித்தார். அதில்,

“மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 45.77 கி.மீ. நீளத்தில் மாதவரத்திலிருந்து சிறுசேரி வரையிலும், 17.12 கி.மீ. நீளத்தில் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரையிலும் மற்றும் 44.66 கி.மீ. நீளத்தில் மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் மொத்தம் 107.55 கி.மீ. நீளத்தில் மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்களை 85,047 கோடி ரூபாய் என்ற உத்தேச மதிப்பீட்டளவில் செயல்படுத்துவதற்கு, மாநில அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும் நிதியுதவிக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில், கலங்கரை விளக்கத்திலிருந்து வடபழனி வழியாக சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நான்காவது வழித்தடத்தை, விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆற்காடு சாலையில் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு,

கலங்கரை விளக்கம் முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை நீட்டிப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கான விரிவான துணை திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதால், சுமார் 3,850 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

சென்னையைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும்வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்கான விரிவான சாத்தியக்கூறு, திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும். இந்தத் திட்டத்துக்கு, மத்திய அரசின் மூலமாக ஜெர்மன் நிதி நிறுவனமான கே.எப்.டபுள்யூ (KFW)-விடம் நிதியுதவி பெறப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.