ன்று ஈ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. தலைமையகத்தில் கூடி இயற்றப்பட்ட தீர்மானங்கள் நான்கு.  அவை, சசிகலா, தினகரனால் செய்யப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செல்லாது, நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.  ஆகியவற்றை கட்சியே நடத்த வேண்டும், செயற்குழுவும், பொதுக்குழுவும் உடனடியாக கூட்டப்பட வேண்டும், தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்பவைதான் அவை.

தினகரனை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது ஏற்கெனவே சொல்லிவரப்படும் விசயம்தான். ஆனால்,  அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது எம்.ஜி.ஆர்.” இதழ், அக் கட்சியின் அதிகாரபூர்வ தொ.கா. என்று கூறப்படும் ஜெயா டிவி இரண்டையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தை தற்போதுதான் எடப்பாடி, ஓ.பி.எஸ். அணியினர் ( அட.. அதான் இணைந்துவிட்டார்களே.. இனி எடப்பாடி அணி என்றே சொல்வோம்.) கொண்டிருப்பது தற்போது வெளியாகி இருக்கிறது.

இது குறித்து எடப்பாடி அணிசைச் சேர்ந்த முத்துக்கருப்பன் எம்.பி.யிடம் பேசினோம். அவர்,  “நமது எம்.ஜி.ஆர். – ஜெயா டிவி இரண்டுமே கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்தும் அதிகார பூர்வ ஊடகங்கள். இவற்றை கட்சிக்கு எதிராக தினகரன் தரப்பு பயன்படுத்துகிறது. இரண்டு ஊடகங்களையும் ஆரம்பித்தவர் அம்மா (ஜெயலலலிதா)தான். ஆகவே அவற்றை கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்” என்றார்.

டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத்தை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் இரண்டும்  தனியார் சொத்து. இதுகூட தெரியாத முட்டாள் தமிழக முதல்வராக இருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய வெட்கட்கேடு. நான் சம்பத் வாங்கிய வீட்டை கையகப்படுத்தவேண்டும் என்று ஒரு முதல்வர் சொன்னால் அவர் 420 தானே. அன்றே இதை எங்கள் துணைப் பொதுச்செயலாளர் கூறினார்.

அவர்கள் அத்தூமீறி இந்த இரு அலுவலகங்களுக்கு வந்து பார்க்கட்டும். விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்றார் ஆவேசமாக.

இதற்கிடையே அ.தி.மு.க. தரப்பில் சிலரிடம் பேசியபோது, “ஜெயா டி.வியைவிட நமது எம்.ஜி.ஆர். நாளிதழை கைப்பற்றுவதில் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். ஆகியோர் உறுதியாக இருக்கிறார்கள். நமது எம்.ஜி.ஆர். இதழை நடத்தும் ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனம் வேண்டுமானால் சசிகலாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம். ஆனால் அந்த நாளிதழைத் துவங்கியது மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான். கட்சிக்காகத்தான் அதை அவர் துவங்கினார். ஆகவே அந்த நாளிதழின் பெயர் கட்சிக்குச் சொந்தமானது.

ஆகவே தற்போது செயல்பட்டு வரும் அந்த நாளிதழின் அலுவலகத்தைக் கைப்பற்றுவது சட்டரீதியாக முடியாவிட்டாலும். அதே பெயரில் நாளிதழ் துவங்க ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இருவரும் தீர்மானித்துவிட்டார்கள்.

அதற்கும் சட்டச் சிக்கல் வரும் என்றால், “நம் எம்.ஜி.ஆர்.” என்ற பெயரில் நாளிதழ் துவங்க முடிவு செய்துவிட்டார்கள்.

நமது எம்.ஜி.ஆர். இதழில் ஆசிரியராக இருந்து, பாஜகவின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக்காட்டியதால் தினகரனால் நீக்கப்பட்டவர் மருது. அழகுராஜ். அவர் பொறுப்பில் இருந்தவரை காரசாரமான கட்டுரைகள், கவிதைகளை அளித்து வந்தார். அவை வெற்று பரபரப்பாக இல்லாமல், ஆழ்ந்த பல தகவல்களைக் கொண்டிருக்கும். ஆகவே கட்சியினர் மட்டுமின்றி, கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழை படித்தனர்.

ஆனால் தற்போது அது போன்ற கவிதை, கட்டுரைகள் நமது எம்.ஜி.ஆரில் வெளிவருவதில்லை. ஆகவே மருது. அழகுராஜை ஆசிரியராகக் கொண்டு புதிய நாளிதழை கொண்டுவரும் தீர்மானத்தில் இருக்கிறார்கள் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இருவரும். இதற்காக மருது. அழகுராஜை தொடர்புகொண்டு அவர்கள் பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது” என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

நாளிதழ்களில் தலைப்புச் செய்திகள் வரும். இப்போது நாளிதழ் விவகாரமே தலைப்புச் செய்தியாகப்போகிறது.